களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை - தமிழனின் 2000 ஆண்டு அற்புதம்!
அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரியின் குறுக்கே கல்லணைக் கட்டப்பட்டது. தமிழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு தெலுங்கர் ஒருவரின் பெயர் சொந்தம்கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழரின் பெருமையை நாம் நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும். சரி..அந்த கல்லணையின் அறிவியல் மர்மங்களையும், கரிகாலனின் பெருமையையும் இந்த பகுதியில் காணலாமா?
கல்லணை
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.
பாசனங்கள்
கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல லட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
கரிகாலனின் சிறப்புகள்
கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன்
கல்லணை எப்படி உருவானது?
அடிக்கடி வெள்ளத்தால் அவதிப்படுவதால், அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
கல்லணையின் தொழில்நுட்பம் பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்
ஆச்சர்யம் அளிக்கும் மர்மங்கள் பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழர்களின் பல்வேறு அறிவியல் நுட்பங்களை இன்றுவரை கண்டுபிடிக்கமுடியாமல் திகைக்கும் அறிஞர்கள், கல்லணையையும் அந்த கணக்கில் தான் வைத்துள்ளனர். அந்த ஆச்சர்ய மர்மம் என்ன தெரியுமா
எத்தனை ஆண்டுகள் ஒட்டிக்கொள்ளும் உலகில் இத்தனை ஆண்டுகள் (சுமார் 2000 ஆண்டுகள்) ஒட்டிக்கொள்ளும் ஒரு பசையை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதே. சிமெண்ட்டால் கட்டப்படும் பாலங்கள் கூட அதிகபட்சம் 500 ஆண்டுகளில் பலமிலந்துவிடுவதாகவும், 2000 ஆண்டுகள் நெருங்கியும் இன்னும் பலமுடன் காணப்படும் கல்லணையின் தொழில்நுட்பம் என்னவாக இருக்கும்என்று மண்டையைப் பிய்த்துக்கொள்கின்றனர் சிலர்.
தமிழரின் சிறப்புகளை அழிக்கும் முயற்சிகள் சமீபத்தில் வெளியான "A concise History of South India" என்னும் புத்தகத்தில் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல என்றும், வெள்ள நீர் வடிவதற்குண்டான அமைப்பையே கரிகாலன் செய்தான் என்பதாகவும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிகழ்கால தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுபோகட்டும், கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், ஆதாரங்களுடன் இந்த தமிழர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமையல்லவா?
ஆங்கிலேயரின் சான்று
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். வெள்ளத்தாலும் வறட்சியாலும் தஞ்சை மாவட்டம் வளமை குன்றியபோது, 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால்நியமிக்கப்பட்ட சர் ஆர்தர் காட்டன் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.
மணிமண்டபம்
பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது
எப்படி செல்லலாம்?
திருச்சி மாநகரிலிருந்து அரை மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கல்லணை. திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து 25 நிமிட தூரத்திலும், தஞ்சாவூரிலிருந்து 1.30 மணி நேர பயண தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உள்ளன