சமைத்தால் மன அழுத்தம் நீங்கும் !
மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என்ன வழி? இந்த கேள்விக்கான விடை தேடித்தான் பலரும் இப்போது அலைந்து கொண்டிருக்கிறார்கள் . மன அழுத்தம் போக்கும் ரகசியத்தை எங்கேயும் தேட வேண்டியதில்லை. உங்கள் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது என்று கூறுகிறது உளவியல். அப்படி என்ன சமையலறையில் இருக்கிறது என்ற கேள்விக்கு ‘சமையல்தான் அந்த மருந்து’ என்று இன்னும் ஆச்சரியத்தை உருவாக்குகிறார்கள்.
‘மூர்க்கத்தனமாக செயல்படும் மூளை நரம்புகளை அமைதிப்படுத்தவும், உடைந்துபோன இதயத்தை குணப்படுத்தவும், சலிப்பு, கோபம், ஆற்றாமை, கவலை மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்தவும் சமையலால் முடியும்’ என்கிறார் அமெரிக்க உளவியலாளரான கரோல் லிபெர்மென். சமையல் எந்தவிதத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதை Addicted to stress என்ற தன்னுடைய புத்தகத்தில் அனுபவப்பூர்வமாகவே விவரிக்கிறார்.
‘‘உணவுக்குத் தேவையான பொருட்களை சேகரிப்பது, விதவிதமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருக்கும் காய்களை வெட்டுவது, மசாலா பொருட்களை வறுப்பது, செய்த உணவை அலங்கரிப்பது என சமைக்கும்போது வழக்கமான கவலைகளில் இருந்து நம் கவனம் திசைமாறுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களின் நறுமணம் நுகர்வு செல்களையும், காய்கறிகளின் வண்ணங்கள் பார்வை நரம்புகளையும், வறுப்பது, தாளிப்பது போன்ற ஒலிகள் செவிப்புலனையும், பொருட்களைப் பயன்படுத்தும்போது தொடு உணர்வையும் மற்றும் உணவை ருசிக்கும்போது சுவை உணர்வையும் சமையல் ஒருசேர தூண்டுகிறது.
இது முற்றிலும் உங்களின் மனநிலையை மேம்படுத்திவிடுகிறது. இதன்மூலம் நம் உணர்வுகளை முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும். கடுமையான பணி, போக்குவரத்து இரைச்சல் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, ஆழ்மனதுடன் நம்மை இணைக்கும் அமைதிசூழ் சமையலறை ஒரு தியான அறையைப்போல் இருப்பதால், அங்கே சமைப்பது ஒரு தியானத்துக்கு ஈடான பலனையும் அளிக்கும். அன்பானவர்களுக்காக சமைக்கும்போது அந்த ஆத்மதிருப்தியும் அமைதியைத் தந்துவிடுகிறது. புதிதான ஒரு உணவை தயாரிப்பதால் ஒரு சிசுவை உருவாக்கியதற்கு இணையான உணர்வை படைப்பாளியின் அனுபவத்தையும் சமையல் கொடுக்கிறது’’ என்கிறார் கரோல் லிபெர்மென்.