கைவிட்ட உறவு, பிளாட்பாரம் வாசம்... மீண்டு, சாதித்த பெண்! ஒரு நிஜ அருவி யின் கதை
எனக்கு இருக்குற வியாதிக்கு ஆந்திராவுல வைத்தியம் பார்க்க முடியாதுனு, மாமா ஒருத்தரோட என்னை சென்னைக்கு அனுப்பிவெச்சாங்க. அவர்கிட்ட, `பாதி வழியிலேயே விட்டுட்டு வந்துடுங்க’னு சொல்லி அனுப்பியிருக்காங்க. அவரும், விஜயவாடாவுல, ட்ரெயின்ல இருந்து இறங்கிப் போயிட்டாரு. மொழி தெரியாத, ஆள் தெரியாத ஊர்ல தனியா வந்து நின்னேன். தாம்பரத்துல பிளாட்ஃபார்ம்ல ரெண்டு நாள் படுத்திருந்து ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவிச்சேன்" கண்கலங்கிப் பேசுகிறார் `நிஜ அருவி.’
அண்மையில் வெளியான 'அருவி' திரைப்படம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மையமாகக் கொண்டு வெளிவந்திருந்தது. எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தால் மட்டுமல்ல, சொந்தக் குடும்பத்தாலும் எப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் அவர்கள் படும் இன்னல்களும் அழுத்தமாக `அருவி’ திரைப்படத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்தது .
"எய்ட்ஸ் என்பதும் புற்றுநோய், இதயநோய்போல ஒரு நோய்தானே... எய்ட்ஸ் நோயாளிகளை மட்டும் ஏன் இப்படி அருவருப்பாகப் பார்க்கிறீங்க!" என்றொரு வசனம் அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். இது படம் பார்க்கும் அத்தனை பேரிடமும், நேரடியாகக் கேட்பதுபோல இருக்கும். தொழில்நுட்பம், நாகரிகம் முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான பார்வை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது என்பதே கசப்பான உண்மை.
ஏற்கெனவே, உடல்ரீதியாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய குடும்பத்தினரும் அவர்களைத் தூக்கியெறிந்து நிர்க்கதியாக்குகிறார்கள். `அருவி’ போன்ற கதாபாத்திரங்கள் சினிமாவில் மட்டும் இல்லை. நிஜ வாழ்க்கையிலும் நம்முடன் இவர்களைப் போன்ற எத்தனையோ பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பையும் தாண்டி வெற்றிக்கொடி நாட்டியவர்கள் ஏராளமானோர்.
அப்படிப் பலருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண், தனக்கு நேர்ந்த அவலங்களையும், அதிலிருந்து எப்படி அவர் மீண்டு வந்தார் என்பதையும் விவரிக்கிறார் இங்கே... "அது, 2003-ம் வருசம். எனக்கு 17 வயசு. திடீர்னு எனக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. என் உடம்புல போதுமான அளவுக்கு ரத்தம் இல்லைனு டாக்டர் சொன்னதால, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில ரத்தம் ஏத்தினோம். அந்த ரத்தத்தின் மூலமாதான் எனக்கு எய்ட்ஸ் வந்திருக்கு. ஆனா, அது எங்களுக்குத் தெரியவந்தது 2005-ம் வருசம்தான்.
தொடர்ச்சியா உடம்பு சரியில்லாம காய்ச்சல் வந்துக்கிட்டே இருந்ததால, என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. டெஸ்ட் எடுத்து பார்த்தப்பதான் எனக்கு எய்ட்ஸ் இருக்குறது தெரிய வந்துச்சு. இந்த நோய்க்கு மருந்தே இல்லைனு அந்த ஆஸ்பத்திரியில சொன்னாங்க. எனக்கு அப்போ எய்ட்ஸைப் பத்தி எதுவுமே தெரியாது. எங்க வீட்டுல இருக்குறவங்களும் அதிகமாப் படிச்சிருக்கலை. அதனால அவங்களுக்கும் எதுவும் தெரியலை.
அதனால, ஆஸ்பத்திரியில கொடுத்த ரிப்போர்ட்டை எடுத்துக்கிட்டுப் போய் எங்க ஊர்ல இருந்த பெரியவங்ககிட்ட கொடுத்து, என்ன ஏதுன்னு விசாரிச்சாங்க. அவங்க வீட்டுல உள்ள படிச்ச பசங்க ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு எனக்கு இருக்குற நோயைப் பத்திச் சொன்னாங்க.
எங்ககிட்ட சொன்னதோட, ஊர் முழுக்க அதைப் பரப்பிவிட்டுட்டாங்க. நோய் எல்லோருக்கும் பரவும்னு வேற சொல்லியிருக்காங்க. அதனால, ஊர்ல இருந்த அத்தனைபேரும் என்னையும் என் குடும்பத்தையும் ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க வீட்டுப் பக்கமே யாரும் வர மாட்டாங்க. எங்க வீட்லயும் என்னை ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்க, தனி டம்ளர், தனித் தட்டுதான் கொடுத்தாங்க. எங்க விவசாய நிலத்துலயே சின்னக் குடிசையைப் போட்டு அங்கேதான் என்னைத் தங்கவெச்சாங்க. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. நான் வீட்டுல இருந்தா, அவங்களை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கனு என்னை வீட்டைவிட்டுத் துரத்த முடிவு பண்ணிட்டாங்க.
ட்ரீட்மென்ட் எடுக்கறதுக்காகனு சொல்லி, மாமா ஒருத்தர்கூட சென்னைக்கு அனுப்பிவெச்சாங்க. அவரும் பாதியிலேயே இறங்கிப் போயிட்டாரு. எனக்குப் பாதி வழியில இறங்குறதுக்கு பயமா இருந்துச்சு. அதனால, ட்ரெயின்லயே கடைசி ஸ்டாப் வரைக்கும் வந்துட்டேன். நான் வந்திறங்கின இடம் எக்மோர்னு எனக்கு அப்போ தெரியாது. தமிழ் மொழியும் தெரியாது, சென்னையில யாரையும் எனக்குத் தெரியாது. ட்ரெயின்ல இருந்து இறங்கினதுமே என்கிட்ட இருந்த அட்ரஸை ஆட்டோகாரங்ககிட்ட காமிச்சு, எக்மோர்'ல இருந்து தாம்பரம் சானிட்டோரியத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
நான் போனது சனிக்கிழமை. `சனி,ஞாயிறு ரெண்டு நாளும் லேப் டெக்னீஷியன் யாரும் இருக்க மாட்டாங்க, அதனால டெஸ்ட் எதுவும் எடுக்க முடியாது திங்கட்கிழமை வா’ன்னு சொல்லிட்டாங்க. அந்த ரெண்டு நாள் எங்கே தங்குறதுனு தெரியாம பிளாட்பாரத்துலேயே தங்கியிருந்தேன். ரொம்ப பயமா இருந்துச்சு. அந்த நாள்களை இப்போ நினைச்சாலும் திக் திக்-னு இருக்கு. அப்புறம் ஆஸ்பத்திரியில ட்ரீட்மென்ட் எடுத்த அந்த நாலைஞ்சு நாளும் பிளாட்பாரத்துலதான் படுத்திருந்தேன்.
என்னைப் பத்தி கேள்விப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் வந்து என்னைக் கூட்டிட்டுப் போயி, அவங்களோட காப்பகத்துல தங்கவெச்சாங்க. இப்பவும் அங்கேதான் தங்கியிருக்கேன். கிட்டத்தட்ட 12 வருசம் ஆகிடுச்சு.
2011-ம் வருஷம் என்கூட வேலை செஞ்ச, என்னை மாதிரியே ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்ட ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு இப்போ ரெண்டரை வயசுல ஒரு ஆண் குழந்தை இருக்கான். அவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை, நல்லா ஆரோக்கியமா இருக்கான்.
என்னைக் காப்பாத்தின அந்தத் தொண்டு நிறுவனத்துலதான் இப்போ மேனேஜரா வேலை பார்க்குறேன். என்னை மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்துக்குறேன். ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் எங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு நான் எங்கே இருக்கேனு தெரியாது. என்னை வந்து பார்க்கவும் இல்லை.
நம்ம மக்களுக்கு நான் சொல்லிக்க விரும்புறது ஒண்ணே ஒண்ணுதான்... தயவுசெஞ்சு எய்ட்ஸால பாதிக்கப்பட்ட யாரையும் ஒதுக்காதீங்க. யாரும் விரும்பி இந்த நோயை ஏத்துக்குறது இல்லை. என்னை மாதிரி எந்தத் தப்பும் செய்யாதவங்களுக்கும், பெத்தவங்க மூலமா குழந்தைகளுக்கும்கூட இந்தப் பாதிப்பு வந்திருக்கு. அந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்களை நீங்க ஒதுக்க ஆரம்பிச்சீங்கன்னா அவங்க மனசளவுல ரொம்ப பாதிக்கப்படுவாங்க. சரியா ட்ரீட்மென்ட் எடுத்துக்கவும் மாட்டாங்க. அதனால அவங்க சீக்கிரமே மரணம் அடைய வாய்ப்பிருக்கு. முடிஞ்சா அவங்களை அரவணைச்சு அன்பு செலுத்துங்க." அழகுத் தமிழில் பேசி முடித்தார் அருவி.டாக்டர் சேகர்
ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களைக் குடும்பத்தினரும், சுற்றி இருப்பவர்களும் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து மூத்த மருத்துவ அதிகாரியும், மருத்துவருமான சேகரிடம் பேசினோம்... "ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிப்பது, இப்போது பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது. முன்னர் மக்கள் அவர்களைப் புறக்கணித்ததற்கு காரணம், அவர்களுடன் பேசினால், பழகினால் எங்கே நமக்கும் வந்துவிடுமோ என்கிற பயம்தான். அப்படியெல்லாம் பரவாது என்பது தெரிந்ததும் எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணிப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதும் ஒரு காரணம்.
இதுவரை, பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் பதிவுசெய்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்களெல்லாம் தைரியமாகத்தான் இருக்கிறார்கள். சில நேரங்களில் மருத்துவமனைகளில், அவர்களின் உறவினர்கள் யாரையாவது பார்த்துவிட்டால் மட்டுமே ஓடி, ஒளிவார்கள். அந்த நிலையும் மாற வேண்டும் என்றால், அவர்களை குற்றவாளியைப்போல் பார்க்கும் குடும்பத்தாரும் இந்தச் சமூகமும் மாற வேண்டும்.
ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுடன் ரத்தத் தொடர்பு இருந்தால் மட்டுமே அது பரவும். ரத்தம் வேறு எந்த வகையில் கலந்தாலும் பரவும். மற்றபடி அவர்களுடன் பேசுவதால், பழகுவதால் கண்டிப்பாகப் பரவாது. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களை பாவிகளாகப் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
டயாபட்டீஸ், ஹைப்பர் - டென்ஷன், தைராய்டு போன்ற நோய்கள்போல, நாள்பட சமாளிக்கக்கூடிய ஒரு நோய்தான் எய்ட்ஸ் (Chronic manageable disease). மேற்கண்ட நோய்களுக்கு எப்படி வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அதுபோலத்தான் எய்ட்ஸ்-க்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், எவ்வளவு நாள்கள் வாழ்வார்களோ, அதே அளவுக்கு ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களாலும் வாழ முடியும்.
கணவன் செய்த தவறால் மனைவிக்கோ, பெற்றோர்களின் மூலமாக பிள்ளைகளுக்கோ, அல்லது வேறு ஏதேனும் வழிகளில்கூட ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படும். எனவே, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே தவறானவர்கள் என்ற கண்ணோட்டத்தை முதலில் கைவிட வேண்டும். அவர்களையும் சராசரி மனிதன் என்கிற கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் சேகர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதுதான் வள்ளுவன் தந்த மறை. பிறப்பால் ஏழை, பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று பார்க்கிற பாகுபாடு மட்டுமல்ல... இதுபோல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதும் பாகுபாடு காட்டக் கூடாது. பிறப்பின்போது மட்டுமல்ல, வாழ்வின் நடுவில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னை நேர்ந்தாலும் அவரும் அனைவராலும் மதிக்கப்பட, நேசிக்கப்பட வேண்டியவர்தான் என்பதை அனைவரும் மனதில் கொள்வோம்.