பிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும்
பிராணாயாமம் உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது. பிராணாயாமம் உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக ஆக்குகிறது. ஆனால் அத்துடன் அதன் பயன்கள் முடிந்துவிடவில்லை. பிராணாயாமம் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது.
பிராணாயாமம் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது. அது உங்கள் வாழ்க்கை அனுபவத்தையே மாற்றிவிடும் ஒரு கருவியாகும். பிராணாயாமம் உங்களை உங்களது உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, உங்கள் உள்ளே அடியாழத்தில் இருக்கும் உள்பரிமாணத்தை உணரச் செய்கிறது.
பிராணாயாமம் சுய விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு முழுமையான பாதை. யோகாவின் எட்டு பிரிவுகளான யாமா, நியமா, ஆசனா, பிராணாயாமம், ப்ரதியஹாரா, தாரணா, தியானா, சமாதி ஆகியவற்றில் பிராணாயாமம் என்பதும் ஒரு பிரிவு. முதல் இரண்டு பிரிவுகளும், ஒரு தொடக்க நிலை சாதகர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை போதிக்கின்றன.
அவை பெரும்பாலும் ஒருவரின் வளர்ச்சிக்கு உதவும் ஒழுக்க விதிகளைப் போன்றவை. நிறைய பேருக்கு யோகா என்றாலே ஆசனங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆசனா என்பது உடலுக்கானது. உடல் என்பது மக்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது அவர்களை பல விதங்களில் ஆட்சி செய்கின்றது.
உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களால் உங்கள் உடலைத் தாண்டி சிந்திக்க முடியாது. இப்போது உங்கள் காலில் வலி இருக்கிறதென்றால், நான் உங்களிடம் ஞானமடைவதைப் பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ பேசினாலும், நீங்கள் என்னிடம் உங்கள் கால் வலிக்கான நிவாரணத்தைப் பற்றித்தான் கேட்பீர்கள்.
உங்கள் உடலுக்கு உங்கள் மேல் அத்தனை ஆதிக்கம் இருக்கிறது. அப்படியென்றால் ஆசனா என்பது வெறும் உடல் வலிமை பெறுவதற்கு மட்டும்தானா? இல்லை. அது உங்கள் உடலை இப்போதிருக்கும் நிலையிலிருந்து இன்னும் சூட்சுமமான நிலைக்கு நகர்த்திச் செல்வதற்கு உதவுகிறது.