வங்கிகளைப் பாதுகாக்க புதுசட்டம்... மக்களைப் பாதிக்குமா?
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அடிக்கடி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் மயமாக்கல், ஜி.எஸ்.டி ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ‘பெயில்-இன்’ சட்டம்.
வங்கிகளைத் திவால் ஆகாமல் தடுக்கவும், நஷ்டத்திலிருந்து மீட்கவும் ‘வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு 2017’ என்ற மசோதாவை மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. தற்போது வரைவு அறிக்கை நிலையில் ஆலோசனையில் இருந்து வரும் இந்தச் சட்டத்தில்தான் ‘பெயில்-இன்’ என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, திவால் ஆகும் நிலையில் உள்ள வங்கிகளைப் பாதுகாக்க, அதன் வாடிக்கை யாளர்களின் டெபாசிட் பணத்தை எடுத்துக்கொள்வது என்பதுதான் இந்த ‘பெயில் இன்’ நடைமுறை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. இதனால் இந்தச் சட்டம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்தியக் குடிமக்களின் 63 சதவிகிதச் சேமிப்பு வங்கிகளில் தான் இருக்கிறது.
முன்பெல்லாம் கொஞ்சம் பணத்தைவீட்டின் சமையலறைகளிலும் கட்டிலுக்கடியிலும் பாதுகாப்பாக வைத்துச் சேமித்து வந்தனர். ஆனால், பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிகளில்தான் பணம் இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
எனவே வீடுகளில் வைத்திருக்கவோ, வேறு வகைகளில் முதலீடு செய்யவோ பயப்படும் மக்கள் முழுமையாக நம்பியிருப்பது வங்கிகளைத்தான். இந்த நிலையில், வங்கிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களின் பணம் அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கிடைக்காது என்றால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் இப்போது இந்தச் சட்டத்தில் உள்ள பிரச்னை.
தற்போது, இந்த மசோதா நாடாளுமன்றத் தேர்வுக்குழுவிடம் பரிசீலனையில் இருக்கிறது. நிதி அமைச்சகம், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில், இந்த மசோதாவை அவையில் அறிமுகம் செய்து ஆதரவு திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சட்டம் குறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோவிடம் பேசியபோது, அவர் இந்தச் சட்டத்தை அனைத்து வங்கிகளும் எதிர்ப்பதாகவே கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்மானக் கழகத்துக்கு (Resolution Corporation) இதுவரை வங்கி, இன்ஷூரன்ஸ் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் விவகாரங்களைக் கண்காணித்து வந்த ரிசர்வ் வங்கி, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் சிபிஐ, தேசியக் கடன் வசூலிப்புத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல அமைப்புகளின் அதிகாரங்களைத் தாண்டிய அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது.
வங்கிகளை இணைக்கும் திட்டத்தையும், தேசிய வங்கிகளைத் தனியார் மயப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்தவே இப்படி ஒரு சட்டமும் அமைப்பும் திட்டமிடப்படுகிறது. இந்தச் சட்டத்தில் மக்களின் பணத்தை முடக்குவதாக இருக்கும் ‘பெயில் இன்’ நடைமுறை முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது” என்றார்.
அகில இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், “வங்கிகள் திவாலானால் அரசே திவாலானதுபோல் ஆகிவிடும். ஆகையால்தான், வங்கிகளைக் காப்பாற்ற அரசு இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருகிறது. ஆனால், வங்கிகள் திவாலாகும் வாய்ப்புக் குறைவுதான். இது பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சி மட்டுமே. தனியார் வங்கிகளும்தான் கடன் கொடுக்கின்றன. ஆனால், அவற்றை வசூலிக்கும் அதிகாரம் அவற்றுக்குக் கொடுக்கப்படுகின்றன.
மக்கள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் தேசிய வங்கிகளால் கொடுக்கப்பட்டக் கடனை வசூலிப்பதில் எப்போதுமே சிக்கல்தான். வங்கியில் சாதாரண ஏழை மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும். பெரிய நிறுவன முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்டக் கடனை வசூலிக்க அதிகாரம் வேண்டும்.
அதேசமயம் அரசு, வங்கிசாராத நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. இவை 24%, 36%, 42% என அதிகளவில் வட்டி வசூலிக்கின்றன. இந்த நிறுவனங்கள் கடனை எப்படியோ வசூலித்துவிடுகிறன. இப்படிக் கடன் சந்தையில் வங்கிகளுக்குச் சவாலான விஷயங்கள் அதிகமாக உள்ளன.
பெரும்முதலாளிகளுக்குக் கொடுத்த கடனைத் திருப்பி வாங்குவது குறித்தும், அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்வது, நடவடிக்கை எடுப்பது குறித்தும், சொத்துகளைப் பறிமுதல் செய்வது குறித்தும் இந்தச் சட்டத்தில் எதுவும் இல்லை. அதற்கான சட்டம் வேண்டுமே தவிர, மக்களின் டெபாசிட்டைப் பாதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது நல்லதல்ல. டெபாசிட் தொகைக்குக் கடன் பத்திரங்களாகவோ, பங்குகளாகவோ தருவது பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா என்று யோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
உண்மையில் இந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை இக்ராவின் மூத்த துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசனிடம் கேட்டோம்.
“இந்தச் சட்டம் ஓர் அவசரக் கால சட்டம் போலத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்தச் சட்டத்தின் இறுதி வடிவம் முடிவாகவில்லை. ஆனால், இதுவரையிலான இந்தச் சட்ட வரைவில், திவால் ஆகும் நிலையிலுள்ள வங்கி, தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்தை உடனடியாகத் திருப்பித் தர வேண்டியதில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் மக்களிடையே பெரிய அளவில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்தச் சட்டத்தில் அதுபோன்ற மேம்போக்கான முடிவுகள் எடுக்கப்படாது என்பதே எனது நம்பிக்கை. அப்படி வங்கியின் செயல்பாட்டுக்காக வேண்டி டெபாசிட்டை முடக்குவதாக இருந்தால் அதற்கு நிபந்தனைகள், வரைமுறைகள் நிச்சயமாக வகுக்கப்படும்.
பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும், பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் இதுபோன்ற சட்டங்களை அவ்வளவு எளிதாக நினைத்து நிறைவேற்றிவிட முடியாது. மேலும், வங்கிகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி மூடப்பட நேர்ந்தால், அது பொருளாதாரத்தையும் பாதிக்கும். எனவே, வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் நமக்கு உள்ளது.
இதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ‘தீர்மானக் கழகம்’ என்ற அமைப்பு, ஒவ்வொரு வங்கியையும் ஆராய்ந்து அந்த வங்கியின் நிதி நிலையை வைத்து வகைப்படுத்தும். இந்த வகைப்படுத்துதலை வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, பிராந்தியங்களின் பரவல், பரிவர்த்தனை மதிப்பு, பிற நிதிசார் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யும்.
மிக மோசமான நிலையில் இருக்கும் வங்கிகளில் உடனடியாக இந்த அமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும். சிக்கலில் இருக்கும் வங்கி அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்த அமைப்பு கண்காணித்து வரும். வங்கிகள் தங்களுடைய செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கடன் கொடுப்பதையும், கடன் வசூலிப்பதையும் முறைப்படி செய்ய வேண்டும். இப்போது வாராக் கடன்களாக இருக்கும் பெரும்பாலான கடன்கள் விதிமுறைகளை மீறி வங்கிகள் கொடுத்த கடன்கள்தான். இனிமேலாவது வங்கிகள் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் இதுபோன்ற சட்டங்களுக்கு வேலையே இருக்காது. மேலும், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நாடுகளில் கூட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
ஏற்கெனவே உள்ள சட்டப்படி ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டுக்குக் காப்பீடு இருக்கிறது. இந்தப் புதிய சட்டத்தில் எவ்வளவு டெபாசிட்டுக்குக் காப்பீடு என்பது குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், டெபாசிட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும், காப்பீடு இந்த ஒரு லட்சம் ரூபாயைவிட அதிகமாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.
அதுமட்டுமல்லாமல் டெபாசிட்டுகளுக்குப் பதிலாகப் பங்குகள், கடன் பத்திரங்கள் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, டெபாசிட் பணம் எல்லாம் போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை. சட்டத்தின் இறுதி வடிவம் மக்களைப் பாதிக்காத வண்ணம் இருக்கும் என்று நம்பலாம்” என்று கூறினார்.
இந்தச் சட்டம் மக்களின் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளும் என்று ஒருபக்கம் பயத்தைக் கிளப்புகிறது. மற்றொருபக்கம் உங்கள் பணத்துக்கு எதுவும் ஆகாது என்று அரசு உத்தரவாதம் தருகிறது. வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவசியமானதுதான். ஆனால், அதற்கு மக்களின் பணத்தை முடக்குவதுதான் வழியா என்பதை அரசு யோசிக்க வேண்டும்.
நன்றி விகடன்