திரும்பத் திரும்பத் தோல்வியைத் தழுவியவர் கார்ட்டூனிஸ்டாக வெற்றி பெற்ற கதை!
தோல்வியாளர்கள் தோல்வியை எதிர்பார்க்கிறார்கள்; வெற்றியாளர்கள் தோல்வியை மறந்துவிடுகிறார்கள்’ என்கிறார் முன்னாள் அமெரிக்க ஃபுட்பால் கோச் ஜோ கிப்ஸ் (Joe Gibbs). ஒரு வகையில், உலகம் வெற்றியாளர்கள் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது; அவர்களைத்தான் கொண்டாடுகிறது; அவர்களைத்தான் பல விஷயங்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறது. எத்தனையோ வெற்றிகளை வாரிக்குவித்தவர்கள்கூட ஆரம்பத்தில் சில தோல்விகளையாவது எதிர்கொண்டிருந்திருப்பார்கள். அதற்காகவே பல ஏளனங்களுக்கும், ஏச்சுப் பேச்சுகளுக்கும் ஆளாகியிருப்பார்கள். ஒரு மாபெரும் வெற்றி, அந்த அவமானங்களையெல்லாம், பென்சிலால் வரைந்த கோட்டை அழிரப்பரால் அழிப்பதுபோல, எளிதாக அழித்துவிடும். ஸ்பார்க்கியின் கதை அப்படிப்பட்டதுதான். வாழ்க்கையில் தோல்வி ஒன்றையே வெகு காலத்துக்குப் பரிசாக வாங்கியவரின் கதை!
1922-ம் ஆண்டு, அமெரிக்காவின் மின்னேசோட்டா (Minnesota) மாகாணத்தில் பிறந்தார் சார்லஸ் ஷூல்ஸ் (Charles Schulz). இதுதான் அவர் இயற்பெயர். அவருடைய மாமா ஒருவர், காமிக்ஸ் புத்தகம் ஒன்றில் வரும் ஒரு குதிரைப் பாத்திரத்தின் செல்லப் பெயரால் `ஸ்பார்க்கி’ (Sparky) என்று அழைத்தார். நாளாவட்டத்தில் அதுவே பெயராக சார்லஸுக்கு நிலைத்துவிட்டது. அப்பா ஜெர்மனியைச் சேர்ந்தவர். அம்மா நார்வே நாட்டுக்காரர். வீட்டுக்கு ஒரே பிள்ளை ஸ்பார்க்கி. வளர்ந்ததெல்லாம் செயின்ட் பால் (Saint Paul) நகரில்.
ஸ்பார்க்கிக்கு வரைவதில் கட்டுக்கடங்காத ஆர்வம் இருந்தது. வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டியை விதம்விதமாக படம் வரைந்து தள்ளுவார். ஓவியத்தில் இருந்த ஆர்வத்தில் கொஞ்சமாவது படிப்பில் இருக்க வேண்டாமா? ஸ்பார்க்கி படிப்பில் கொஞ்சம்கூட சூட்டிகை இல்லை. பள்ளியில் எட்டாவது கிரேடு படிக்கும்போதே அத்தனை பாடங்களிலும் ஃபெயில். ஹைஸ்கூலில் படித்தபோது, இயற்பியல் பாடத்தில் அவர் வாங்கிய கிரேடு ஜீரோ. லத்தீன் பாடம், அல்ஜீப்ரா, ஆங்கிலம் அத்தனையிலும் முட்டை. விளையாட்டிலும் பெரிய அளவுக்கு அவர் வெற்றியாளராக இல்லை. பள்ளியின் கோல்ஃப் டீமில் போய்ச் சேர்ந்தார். அந்த ஆண்டு ஒரு முக்கியமான போட்டி நடந்தது. பள்ளியின் சார்பாகக் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்றிருந்தால், அது அவருடைய டீமுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிலும் தோல்வி!
`ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்களை மனிதர்கள் விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகிப் போகிறார்கள் அல்லது தள்ளியே நிற்கிறார்கள். தன் இளமைக்காலம் முழுக்க ஸ்பார்க்கி, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவராகவே வளர்ந்தார். மற்றவர்கள் அவரை விரும்பவில்லை என்பது ஒருவேளை பொய்யாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள யாருமே இல்லை. பள்ளிக்கு வெளியே இருக்கும்போது, வகுப்புத் தோழர்களில் ஒருவர்கூட ஸ்பார்க்கியைப் பார்த்து `ஹலோ’கூடச் சொன்னதில்லை. ஆண் தோழர்கள் கிடக்கட்டும்... ஸ்பார்க்கிக்கு ஒரு மாணவிகூட தோழி கிடையாது. ஆக நட்பு என்கிற விஷயத்திலும் ஸ்பார்க்கிக்குத் தோல்வியே! இந்த விலகல் தன்மைக்கு அவரும் ஒரு காரணம்தான். எங்கே நம்மைப் பார்த்துச் சிரித்துவிடுவார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயம் அவருக்குள் இருந்தது.
ஸ்பார்க்கி ஒரு தோல்வியாளர்... இது வகுப்புத் தோழர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஏன்... அவருக்கேகூடத் தெரிந்திருந்தது. அந்தப் பழிச்சொல்லோடு வாழ அவர் பழகிக்கொண்டார். `ஒரு விஷயம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால், அப்படித்தான் நடக்கும்’ என்கிற யதார்த்தத்துக்கு அவர் பழகிக்கொண்டார். எது எப்படியிருந்தாலும், ஸ்பார்க்கிக்கு ஒன்றே ஒன்று மிக மிக முக்கியமானது... அது, ஓவியம் வரைவது. தான் வரையும் ஓவியங்கள் மேல் அவர் அபார நம்பிக்கை கொண்டிருந்தார். அவற்றைப் பார்த்து யாருமே அவரைப் பாராட்டவில்லை, ஒரு சின்ன ஷொட்டுக்கூட அவருக்குத் தரவில்லை. அதைப் பற்றி அவருக்குக் கவலையும் இல்லை. தனிமையில் தான் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்துப் பார்த்து, தனக்குத் தானே பெருமைப்பட்டுக்கொண்டார்.
தோல்வி விடாமல் அவரைத் துரத்தியபடி இருந்தது. ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. வருடா வருடம் பள்ளியின் சார்பாக ஒரு ஆண்டு மலர் கொண்டு வருவார்கள். அதில் வெளியிடுவதற்காக தன் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பிவைத்தார். `சாரி... பிரசுரிக்க முடியாது’ என்று ஆசிரியர் குழுவிலிருந்து திருப்பியனுப்பிவிட்டார்கள். தன் ஓவியங்களைத் தூக்கியெறிந்ததுபோல உணர்ந்தாலும், தன் திறமையை நினைத்து தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டார் ஸ்பார்க்கி. அந்தக் கணத்தில்கூட ஓவியராக வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு மேலோங்கியிருந்தது.
வாழ்க்கை நினைத்ததுபோலெல்லாம் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பதில்லை. ஸ்பார்க்கி விஷயத்திலும் அது நடந்தது. 1943-ம் ஆண்டு, அவருடைய அம்மா டேனா (Dena) புற்றுநோய் பாதித்து இறந்து போனார். அம்மாவின் மரணம் அவரை உலுக்கிவிட்டது. ஸ்பார்க்கி அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அங்கும் அவருடைய துரதிர்ஷ்டம் விரட்டத்தான் செய்தது. `50 காலிபர் மெஷின் கன்’ டீமில் பணி. போரில் ஈடுபட்டிருந்தபோது, ஒரே ஒருமுறைதான் அவருக்குத் தன் துப்பாக்கியை எடுத்துச் சுடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும் அவரால் சுட முடியவில்லை... துப்பாக்கியில் குண்டுகளை நிரப்ப மறந்திருந்தார். நல்லவேளையாக எதிராளி அதற்கு முன்பாகவே சரணடைந்திருந்தான்.
1945-ம் ஆண்டு ராணுவப் பணியை முடித்துக்கொண்டு மின்னேப்போலிஸ் (Minneepolis) நகரத்துக்குத் திரும்பினார். சில பத்திரிகைகளின் சின்னச் சின்ன வேலை... எதுவும் திருப்திகரமாக இல்லை. பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்தார். அவர்கள் சில சாம்பிள் ஓவியங்களை அனுப்பச் சொன்னார்கள். வெகு கவனமாக வரைந்து அனுப்பினார் ஸ்பார்க்கி. அதுவும் நிராகரிக்கப்பட்டது. அவர் ஒரு தோல்வியாளர் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம்.
ஆனால் தான் தோல்வியாளர் என்பதை ஏற்றுக்கொள்ள ஸ்பார்க்கி தயாராக இல்லை. தன் சொந்தக் கதையையே கார்ட்டூனாக வரைய முடிவு செய்தார். அந்தக் கதையில் வரும் சிறுவன் அவரைப்போலவே எல்லாவற்றிலும் தோற்றுப்போகும் ஒருவனாக இருந்தான். அந்த கதாபாத்திரத்துக்கு `சார்லி பிரௌன்’ என்று பெயர் வைத்தார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். அந்தச் சிறுவனின் வடிவில் எல்லோரும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்தார்கள். சார்லி பிரௌன் கதாபாத்திரத்தை `பிரியத்துக்குரிய தோல்வியாளன்’ (Loveable Loser) என்று அழைத்தார்கள். அந்தக் கதாபாத்திரம் உலகப் புகழ்பெற்ற ஒன்றாக மாறிப்போனது. பலமுறை தோல்விகளைத் தழுவிய, திரும்பத் திரும்ப நிராகரிக்கப்பட்ட ஸ்பார்க்கி மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டாக, வெற்றியாளராக, அவர் இயற்பெயராலேயே `ஓவியர் சார்லஸ் ஷூல்ஸ்’ என்று அடையாளம் காணபப்ட்டார்.