ரூபாய் நோட்டு அச்சும், வடிவமைப்பும் : சிறப்புக் கட்டுரை
இந்திய பண, நோட்டுகளை அது குறித்த பிரச்னைகளை ரிசர்வ் வங்கியே அதாவது, The Reserve Bank of India Act, 1934 சட்டத்தின் கீழ் கையாள்கிறது. எந்த பின்னங்களில் பணத்தாளை அச்சடிப்பது என ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் படியே அரசாங்கம் முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி, அரசாங்கம் இருவரின் முடிவின்படியே பணத்தாளின் வடிவமைப்பும், அதன் பாதுகாப்பு அம்சங்களும் முடிவாகின்றன.இந்திய ரூபாய் மதிப்பைக் குறிக்கும் சிம்பல், இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட போட்டி ஒன்றில் ஐஐடி கெளஹாத்தியைச் சேர்ந்த உதய்குமார் எனும் நபரால் வடிவமைக்கப்பட்டு தேர்வானது. இந்திய ரூபாய் நோட்டின் டிசைனும் கூட ஐ எஸ் ஓ முத்திரை பெற்றது(ஐஎஸ்ஓ 4217)பணத்தாளின் வடிவமைப்பை பொருத்த வரை, அதன் பாதுகாப்பு அம்சமே முக்கியம் என்பதாலேயே, அவ்வப்போது பணத்தாளின் வடிவமைப்பு மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சில சமயங்களில், ”இதற்கு முன் புழக்கத்தில் இருந்த இன்ன வடிவமைப்பில் உள்ள ஐநூறு ரூபாய் தாள் செல்லாது” என்பது போன்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் வருவது எல்லாம் அதன் பாதுகாப்பு அம்சம் காரணமாகவும், அதே நோட்டு, கள்ள நோட்டாக அடிக்கப்பட்டு, புழக்கத்தில் இருப்பதை கண்டுபிடித்த காரணத்தினாலும், அந்த ரூபாய்த் தாள் கருப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்ட தகவல் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தாலும்தான். இப்படி ஒரு பணத்தாளை செல்லாது என அறிவிப்பதும், நம்மிடம் அப்படியான நோட்டு இருந்தால் அதை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வருவதும், அப்படியான பணத்தாள்களை அடையாளம் காணவும் தான்.பணத்தாளில் காந்தி படத்தைப் போடுவது என்பது சட்டத்தால் வரையறுக்கப்பட்ட ஒன்றில்லை. அனைவராலும் ஏற்கப்பட்ட புள்ளி என்பதால் அவர் படமே பயனாகிறது.
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி பணத்தாள் தொடரில், மகாத்மா காந்தியின் படத்தை 1996ல் இருந்து பயன்படுத்தத் தொடங்கியது. இது முதலில் பத்து மற்றும் ஐநூறு ரூபாய் பணத்தாட்களில் அச்சிடப்பட்ட்து. அதன் பின் ஐந்து மற்றும், ஆயிரம் ரூபாய் தாளிலும் இந்தப் படமே இடம் பெறுகிறது.காந்தியின் அந்த உருவப்படம், அவர் லார்டுபேதிக்-லாரன்சுடன் இருந்த போது எடுக்கப்பட்ட படத்தை க்ராப் செய்து எடுக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்கள் எனில், பணத்தாளை நெடுக்குவாக்கில் வைத்துப் பார்த்தால் ஒரு நெடுங்கோடு தெரியும். நோட்டில் 'பாரத்' என தேவநாகரியிலும், ஆர் பி ஐ எனவும் எழுதப்பட்டிருக்கும். பணத்தாளை ஒரு நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் சாய்த்துப் பார்த்தால், காந்தி உருவத்தின் வலது புறம் பணத்தாளின் மதிப்பு நீர்க்கோடு போலத் தெரியும்.மிகச் சிறு அளவுகளில் ரூபாய் நோட்டு மதிப்பும் அச்சிடப்பட்டிருக்கும்.பார்வையற்றவர்கள், ரூபாய் நோட்டு மதிப்பை அறிந்து கொள்ள பத்து ரூபாய் நோட்டில் எந்த அச்சும் இராது. இருபது ரூபாய் நோட்டில் நெடுஞ்செவ்வக அச்சும், ஐம்பது ரூபாய் நோட்டில் சதுர அச்சும், நூறு ரூபாய் நோட்டில் முக்கோண, ஐநூறு ரூபாய் நோட்டில் வட்ட, ஆயிரம் ரூபாய் நோட்டில் டயமண்ட் வடிவ அச்சும் இடப்பட்டிருக்கும்.நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாட்களின் இரு புறமும் மெல்லிய கோடு ஒன்றும் அச்சிடப்பட்டிருக்கும். இதுவும் பார்வையற்றவர்கள் உதவிக்காகவே. இது 2015ம் வருட்த்திய நோட்டில் காணலாம்.அதே போல இடாக்லியோ (எழும்பப்பட்ட அச்சு) எழுத்தில் ரிசர்வ் வங்கியின் அச்சும், அசோக தூண் சின்னமும், காந்தி உருவமும், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் இருக்கும்.எண் பகுதி ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டிருக்கும்.இதில் ஆப்டிகல் ஃபைபர் இருப்பதால் அல்ட்ரா-வயலட் வெளிச்சத்தில் ஒளிரும்.ஐநூறு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணத்தாட்கள் வைத்துப் பிடிக்கும் கோணத்திற்கேற்ப நிறம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.சிறு பூ ஒன்றின் உருவம் பணத்தாளின் இரு பக்கத்திலும், ஒன்றின் மீது ஒன்றாக மிகச் சரியாகப் பொருந்துவது போல அச்சிடப்பட்டிருக்கும்.டிஜிடல் இமேஜைக் கொண்டிருப்ப்பதால் பணத்தாளை கலர் போட்டோகாபி செய்து ஏமாற்ற முடியாது. பணத்தாட்களின் சீரியல் எண்கள் ஆரம்பிக்கும் இடது புறத்து எண் அளவில் இருந்து வலது புறம் செல்லச்செல்ல அதிகரிப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். இந்த நுட்பம் 2015, 16 - ம் வருடங்களில் அச்சிடப்பட்ட பணத்தாட்களிலேயே இடம் பெற்றிருக்கிறது. அதிலும் இருபது, ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாட்களில் மட்டும்.Indian Finance Ministry - ன் கீழ் 2016 - ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட Security Printing and Minting Corportion of India Limited தான் பணத்தை அச்சிடும் வேலையைச் செய்கிறது. இதுதான் bank notes, காசுகள், non-judicial stamps, postage stamps போன்ற அரசு சார்ந்த தாஸ்தாவெஜுகளை அச்சிடுகின்றது.
எந்த ஒரு நாடு, சிறு சிறு பின்னங்களிலும் பணத்தாளையோ, காசுகளையோ தயாரிக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டதாக இருக்கிறது என்பதே பொருளாதார மேதைகள் சொல்லும் கருத்து. ஏனெனில், சிறு பின்னங்களுக்குக் கூட பொருட்கள் வாங்கும் அளவுக்கு அந்த காசுக்கு மதிப்பு இருக்கிறது என்றே பொருள் என்பதால்.சமீபத்தில் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிற்கு பணத்தாட்களை அச்சிட்டு வெளியிட இருப்பதாக ஒரு தகவலும், அதை ஒட்டி, அந்த நோட்டின் வடிவமைப்பும் இணைய தளங்களில் பகிரப்படுகிறது.
இந்த சமயத்தில் நமக்கு எழும் ஒரு கேள்வி. பணத்தாட்கள அதிகம் அச்சடிக்க அச்சடிக்க பணவீக்கம் அதிகம் ஆகும்தானே? எந்த கணக்கும் இல்லாமல் பணத்தாட்களை அச்சடித்துக் கொண்டே இருந்தால் அப்படி ஆகும்தான். அதைக் கண்காணிக்கவே வெவ்வேறு ஃபார்முலாக்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றே ஒரு நாட்டின் உற்பத்தி விகிதத்தை அடிப்படையாக வைத்து ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் கணக்கை நிர்ணயிப்பதே ஆகும்.எளிய மொழியில் சொல்வதெனில்,MV = PQ =GDPMV = Money supplyV = Velocity of MoneyP = Average Price of goods produced in an economy in a yearQ = Total amount of goods in a year.கோல்ட் ஸ்டாண்டர்ட் சிஸ்டம் என்பதும் இதே போன்ற ஃபார்முலாக்களில் ஒன்று.தேவைக்கேற்ப அதிக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தால் என்னாகும்?பணவீக்கம் ஆகும். இதை எளிய மொழியில் சொல்வதெனில், உங்கள் கையில் 100கிலோ தங்கம் இருக்கிறது. உங்கள் வீட்டில் பத்து பேர் இருக்கிறீர்கள். அந்த 100கிலோ தங்கத்தை பத்து பேரும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். ஆளுக்குப் பத்து கிலோ தங்கம். அதற்குப் பதில், ஒவ்வொருவருக்கும், ஒரு கூப்பன். ஒவ்வொரு கூப்பனின் மதிப்பும் பத்து கிலோ தங்கம். எப்போது ஒருவருக்கு தங்கம் தேவையோ அப்போது ஒரு கூப்பனைக் கொடுத்தால் பத்து கிலோ தங்கம் கிடைக்கும்.இந்நிலையில், அந்த ஒவ்வொரு நபரும் திருமணம் செய்து கொள்கிறீர்கள். ஆக இருவது பேர். இப்போது அதே 100 கிலோ தங்கத்தை இருபது பேரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனில், இருபது பேருக்கும் ஒவ்வொரு கூப்பன். அந்த ஓவ்வொரு கூப்பனுக்கும் மதிப்பு ஐந்து கிலோ தங்கம் மட்டுமே. ஏனெனில், உங்கள் வீட்டில் இருக்கும் சொத்து 100கிலோ தங்கம் மட்டுமே. புதிதாக வேறு தங்கம் சேர்க்கவில்லை. அதனால். அது போலவே ஒரு நாட்டில் உற்பத்தி எவ்வளவோ அதன் மதிப்பை அடிப்படையாக வைத்து, நாம் இங்கு பார்த்த கூப்பன் (கூப்பன்தான் ரூபாய் நோட்டு) பிரிக்கப்படுகிறது. குடும்பத்தில் அதிக கூப்பன் சேர்க்க சேர்க்க அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும். ஆனால் உற்பத்தி அதிகரித்தால் (குடும்ப சொத்தில் கூடுதல் தங்கம் சேர்க்கப்பட்டால்) மட்டுமே கூப்பனின் மதிப்பு கூடும். இதுவே ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதன் அடிப்படை பொருளாதாரம்.
ஒரு நாட்டில் பொதுவாக இரு காரணங்களுக்காக பணம் அச்சடிக்கும் நிலை ஏற்படும். ஒன்று ஏற்கனவே இருக்கும் நோட்டுக்களை மாற்ற வேண்டி வரும்போது. இந்தச் சூழல், கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரவோ, கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்திருக்கையில் அந்த குறிப்பிட்ட நோட்டை செல்லாது எனச் சொல்லி அதற்கு மாற்றாக புதிய நோட்டுக்களை அச்சடிப்பதோ, அல்லது மேற் சொன்னபடி, பொருளாதார திருத்தத்தைக் கொண்டுவரவோ, இருக்கும். இதற்கும் முன் பத்தாயிரம் ரூபாய் மதிப்பு ரூபாய் நோட்டுகளை 1938 - ல் ஒரு முறையும், 1954 - ல் ஒரு முறையும் அச்சிடப்பட்ட்து. இந்த அதீத மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கவே பயன்படும் என்பதால் கருப்புப் பணத்திற்கே இது உதவியாக இருக்கும் என்பதும் இந்த எதிர்ப்பிற்கு ஒரு காரணம்.இது போக, இதன் வடிவமைப்பு. ஆனால் இந்த வடிவமைப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வடிவமைப்பே என்பதால், ரிசர்வங்கி அல்லது இந்திய அரசாங்கம் வெளியிடும் வரை பொறுத்திருப்போம்.-ஹன்ஸா (வழக்கறிஞர்)