எளிய மருத்துவக் குறிப்புகள்
எளிய மருத்துவக் குறிப்புகள்
1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்:
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்:
அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.
3. படபடப்புக்கு:
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சுக்குப்பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஒரு கட்டி வெல்லத்தைச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி மிதமான சூட்டில் காலை, மாலை என்று 3 நாளைக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் படபடப்பு நீங்கிவிடும்.
4. நாக்கில் வெண்படலம் படிந்திருந்தால்:
துளிராக ஏழு அல்லது எட்டு வேப்பங் கொழுந்தை எடுத்துக்கொள்ளவும். ஒரு சிறிய துண்டு அதிமதுரத்தைத் தட்டி, ஒரு டம்ளர் நீரில் வேப்பங்கொழுந்தையும் அதிமதுரத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். அதை வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்தால் ஜீரண சக்தி ஏற்படும். நாக்கில் படிந்த வெண்படலம் மறைந்துவிடும்.
5. வயிற்றுப் பருமன் குறைக்க:
ஓமம் 2 ஸ்பூன், ஒரு ஸ்லைஸ் (பத்தை அல்லது கீற்று) அன்னாசியை எடுத்துக்கொள்ளவும். அன்னாசியை 3 சிறு துண்டுகளாக்கவும். இதைத் தண்ணீரில் தனித்தனியாக ஊற வைக்கவும். 20 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டையும் அந்தத் தண்ணீரை விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதை அப்படியே டம்ளரில் ஊற்றிவைக்கவும். அதில் உள்ள மேல்நீரை (தெளிந்தது) மட்டும் காலையிலும் மாலையிலும் அப்படியே இறுத்து, வடிகட்டாமல் குடிக்கவும். இதனால் வயிறு இளைக்கும்.