டிஜிட்டல் போதை மாறும் மூளை… மாற்றும் மூளை!
நம் அறிவு, நினைவாற்றல் என்பவை எல்லாம் நரம்பியல் செல்களின் தொடர்புகள்தான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதானே இயற்கையின் விதி? மூளையும் தான் எதிர்கொள்ளும் சூழலுக்கேற்ப, தான் கற்கும் பாடங்களுக்கு ஏற்ப மாறிக் கொள்கிறது.
இந்த நரம்பியல் நெகிழ்வுக் கோட்பாட்டின்படி, நம் குழந்தைகள் அதிகமாக வீடியோ கேம் விளையாடினால், அது அவர்களின் மூளைத் தொடர்புகளை மாற்றவே செய்யும். அப்படிப் பார்த்தால், அவர்கள் கற்கிறார்கள். தங்கள் இலக்கை நோக்கி வேகமாக நகரும்போது குறுக்கே வரும் வண்டியை இடித்துத் தள்ளிச் செல்ல வேண்டும் என்பது வீடியோ கேம் சொல்லும் ஒரு பாடம். அதையே நிஜத்திலும் பின்பற்றுகிறார்கள். வீடியோ கேமில் அது பலன் தருகிறது.
வீடியோ கேமை ஒரு முறை, இரு முறை விளையாடினால், மூளைக்குச் செல்லும் இந்தப் பாடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் மீண்டும் மீண்டும் இந்தப் பாடத்தைக் கற்கும்போது, அது உங்கள் மூளையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திணிக்கப்படும் பாடம்
உண்மையில், சாலையின் குறுக்கே வண்டி வந்தால் நிற்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கெனவே கற்ற நரம்பியல் செல்களின் தொடர்புகள் மீது இந்தப் புதுப் பாடம் திணிக்கப்படுகிறது. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும்போது, மிக அதிக முறை மேலோங்கும் பாடம், நரம்பியல் செல்களின் தொடர்பை மேம்படுத்திவிடுகிறது.
நிர்பந்தங்கள் (ரிஃப்ளெக்ஸ்) மூளையைக் கேட்டா வருகின்றன? உங்கள் முன்னால் ஒரு பொருள் வேகமாக உங்களை நோக்கி வந்தால், நீங்கள் அதைப் பொறுமையாக உணர்ந்து, அதைப் பற்றி உங்கள் மூளையில் ஆராய்ந்தா முடிவெடுக்கிறீர்கள்? ‘டக்’கென்று சுதாரித்து விடுவீர்கள் இல்லையா? ரிஃப்ளெக்ஸ்களுக்கான எதிர்வினைகள், நினைவிலி மனதிலிருந்து உடனடியாக வெளிப்படுபவை. ஒரு நொடியில் அந்த நரம்பியல் செல்களின் தொடர்புகளுக்குள் கடத்திகள் சென்று, அந்தச் செயலை நிறைவேற்றிவிடும். ஜி.டி.பி. (கேம் டிரான்ஸ்ஃபர் பினாமினா) என்பதும் இப்படித்தான் நிகழும்.
மூளைத் தொடர்புகளில் தாக்கம்
நீங்கள் ஒரு நொடிக்குள் செயல்படுகிறீர்கள். ஒரு நொடியில் உங்களுக்கு எது உண்மை, எது பொய் என்றெல்லாம் தெரிவதில்லை. கணினியால் ‘புரோகிராமிங்’ செய்யப்பட்டதைப் போன்று நீங்கள் ஒரு நொடியில் இந்த விளைவுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள். தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் விளையாடும் நம் குழந்தைகள் இந்த விளைவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
2015-ம் ஆண்டு ‘அடிக்ஷன் பயாலஜி’ எனும் ஆய்விதழில் கட்டுரை ஒன்று வெளியானது. உடா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு ஆய்வாளர்களால் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்களின் மூளையையும் வீடியோ கேம் விளையாடாத சிறுவர்களின் மூளையையும் ‘நியூரோ இமேஜிங்’ செய்ததில், இருவரின் மூளை நரம்பியல் செல்களின் தொடர்பு அமைப்பு வித்தியாசமாக இருந்தது தெரியவந்தது. அதாவது, வீடியோ கேம்கள் கற்றலுக்கான நரம்பியல் செல்களின் தொடர்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அதில் நிரூபணமானது.