பள்ளிக்கு பைக் அல்லது காரில் குழந்தைகளை அழைத்துச் செல்வதால் அவர்களுடைய ஞாபக சக்தி குறையும்! புதிய ஆய்வு முடிவு
காற்று மாசுபாடு என்பது நம்முடைய ஆரோக்கியத்தைப் பல வழிகளில் பாதிக்கக் கூடும் என்றும், இதயத்தைச் சேதமடைய செய்யும் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், நீங்கள் அறியாத அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று உள்ளது, அது என்னவென்றால் குழந்தைகளில் கற்றல் திறனை மங்கச் செய்து அவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை அறிவீர்களா?
ஒரு பிரபல அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் குழந்தைகளின் ஞாபக சக்தி குன்றுவதோடு அவர்களது நினைவாற்றலையும் அவர்கள் இழக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 மைக்ரோமீட்டர் அளவிலான கண்ணுக்கே தெரியாத கார்பன் புகைகளைச் சுவாசிப்பதன் மூலம் கூட இந்த பாதிப்பு ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு. இதற்கு முந்தைய ஆய்வில் 20% பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்கும் பயணிக்கும் வழியிலேயே அதிகமான காற்று மாசுபாட்டிற்கு ஆளாகுகிறார்கள் என்று கண்டறியப் பட்டது.
“சிறிது நேரம் இந்த மாசுபட்ட நச்சுக்காற்றைச் சுவாசிப்பது உடல் நலத்தில் மட்டுமில்லாமல் நரம்பு மண்டலத்திலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட முதன்மை ஆசிரியரான மார் ஆல்வரிஸ் பெட்ரேரொல் கூறியுள்ளார். இந்த ஆய்வு பார்சிலோனியாவில் நடத்தப்பட்டது, இதற்காக 39 பள்ளிகளில் இருந்து 7 முதல் 10 வயது வரையிலான 1,200 குழந்தைகளை இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதே சமயத்தில் இந்த ஆய்வை அவர்கள் பள்ளிக்கு செல்லும் வழித்தடத்தில் சுவாசிக்கும் நச்சுப்புகைகளின் அடிப்படையிலேயே மேற்கொண்டுள்ளனர்.
கண்டுபிடிப்பின்படி வாகனங்களில் இருந்து வெளியாகும் கருப்பு புகையால் குழந்தைகளின் ஞாபக சக்தியானது பாதிப்படைகிறது. அதாவது 2.5 துகள்கள் நம்முள் நுழைவதன் மூலம் 4.6% முதல் 3.9% நினைவாற்றல் சக்தியை நாம் இழக்கிறோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். “பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்லும் குழந்தைகளே இந்த நச்சுப்புகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், அதற்காக கார் மற்றும் பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் தப்பித்து விட்டனர் என்று நினைக்காதீர்கள், அவர்களும் இந்தக் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் ஆனால் நடந்து செல்லும் குழந்தைகளைவிடப் பாதிப்பு இவர்களுக்கு குறைவுதான்” என்கிறார் குழந்தை நலத் திட்டத்தின் தலைவரான ஜோர்டி சன்யர்.
இந்த பிரச்னைக்கு தீர்வே இல்லையா என்றால் ஏன் இல்லை? தீர்வு அனைவருக்கும் ஒன்றுதான், பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு தனியார் வாகனங்களை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு பொது வாகனங்களில் பயணம் செய்து வாகனப் புகைகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதே இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வைக் கொண்டு வரும்.