விளையாட்டில் சாதிக்க வேண்டுவதென்ன - தேசிய விளையாட்டு தினம்... (AUGUST 29)
-'ஓடி விளையாடு பாப்பா...
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா'
என மகாகவி பாரதியார் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அறிவுரை சொன்னார். அறிவியலின் நவீன வளர்ச்சியால் இன்று அந்த பாப்பாக்கள்,
ஓடிவிளையாட நேரத்தை செலவழிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்து, கணினி, அலைபேசியை தட்டி பொழுதை கழிக்கின்றனர்.
இளைய தலைமுறையினர்தான் இப்படி என்றால், திறமை வாய்ந்த
வீரர்களை உருவாக்க வேண்டிய அரசும் வேண்டிய வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சிந்திக்கவில்லை. வீரர்கள் விளையாட தேவையான
வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் எல்லா விளையாட்டிலும் இந்தியா
சாதித்து உலகஅரங்கில் பெருமை சேர்க்கும். ஆக.,29 இன்று தேசிய
விளையாட்டு தினம். இந்நாளிலாவது அதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும்.
விளையாட்டு தினம்
நம்நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரது பிறந்த நாளில் விளையாட்டு தினம் கடை பிடிக்கப்படுகிறது. தயான்சந்த், 1905 ஆக.,29 ல் பிறந்தார். சிறு வயதில் இருந்தே பளு துாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். 1922 ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த பிறகு ஹாக்கியில் ஆர்வம் பிறந்தது. 1926 ல் இந்திய ராணுவ அணி சார்பில் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 1934 ல் தயான் சந்த் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆனார்.
'தயான் சந்த்'தால் தங்கம்
1928, 1932, 1936 ல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்ல இவரே காரணமாக இருந்தார். ஆயிரம் கோல்களுக்கு மேல் அடித்து சாதனை டைத்தவர். 1936 ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதை பார்த்த, ஹிட்லர் மேஜர் பதவி மற்றும் ஜெர்மன் குடியுரிமை தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இவரோ என் தாய்நாட்டிற்காக மட்டும் தான் விளையாடுவேன் என, ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இவருக்கு இன்றும் ஆஸ்திரேலியாவில் சிலை உள்ளது. இப்படிப்பட்டவரால் ஹாக்கிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்தது. ஆனால், இந்த நிலை மாறிவிட்டது. இன்று மீண்டும் அதே தயான் சந்த் திரும்பி வரமாட்டாரா என ஏங்க வேண்டியுள்ளது. இன்று ஒவ்வொரு விளையாட்டும் காலம் உட்பட பல காரணங்களால் மறைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு வகைகள்
உள்அரங்க விளையாட்டு சதுரங்கம், கேரம், ஏணியும் - பாம்பும், தாயம், மேசைப்பந்து, பூப்பந்து.
வெளிஅரங்க விளையாட்டுகள் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, எறிபந்து, ஹாக்கி, கோகோ.
கோட்டுக்குள் விளையாட்டுகள் ஓட்டம், சாக்கோட்டம், அஞ்சலோட்டம்.
கோடில்லா விளையாட்டுகள் நீளம், உயரம் தாண்டுதல், கோலுன்றி பாய்தல்.
குழு விளையாட்டுகள்
கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கோகோ, கபடி, கைப்பந்து, கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு.
பழைய கால விளையாட்டுகள்
அச்சுப்பூட்டு, கிட்டிப்புள்ளு, கோலி, குச்சி விளையாட்டு,
பல்லாங்குழி, பட்டம், பம்பரம், ஆனமான திரி, கரணபந்து,
குதிரைக்கு காணம் காட்டல், கொக்கு விளையாட்டு, கோழிக்கால், தை தக்கா தை, நடைவண்டி ஓட்டம், நொண்டி, பச்சை குதிரை, பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை, மாட்டுக்கால் தாண்டல், அணில் பிள்ளை, ஆடும் ஓநாயும், புலியும் ஆடும்.
ஒவ்வொரு மாணவரும் பங்கேற்பு
ஒவ்வொரு பள்ளியிலும்
கட்டாய விளையாட்டு மைதான வசதி வேண்டும். தினமும் ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும்.
வீரர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய விடுதி அவசியம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்-தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன வசதிகளுடன் கூடிய உள் மற்றும் வெளி அரங்க விளையாட்டு
மைதானங்கள் வேண்டும். எல்லா மாணவர்களும்
எதாவது ஒரு விளையாட்டில் பங்கு பெற வேண்டும்.
அவர்களை ஊக்குவிக்க விளையாட்டு உபகரணங்களை பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஏற்கனவே இருந்தது போல, விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இந்திய அணியில் இடம் வேண்டும்
நான் 9ம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆர்வம் வந்தது. என் சகோதரர்கள் 3 பேரும் கிரிக்கெட் வீரர்கள். முறையான பயிற்சியால் ரஞ்சி கோப்பை, சையத் முஸ்பாட் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ்நாடு பிரிமியம் லீக் கிரிக்கெட்டில் கோவை அணிக்காக விளையாடி வருகிறேன். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது கனவு. கிரிக்கெட் மூலம் 2014ல் வருமான வரித்துறையில் வேலை கிடைத்தது. பயிற்சியாளர்கள் வெங்கட்டராமன், சந்திரமவுலி, ஜாபர், பழனி, திறமையை வளர்த்து கொள்ள எனக்கு உறுதுணையாக இருந்தனர். என்னை போல் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய உள்ளனர். பிற விளையாட்டுகளை போல் கிரிக்கெட்டுக்கும் தனியே பயிற்சியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். எம்.முகமது, கிரிக்கெட் வீரர்
அரசு உதவி தேவை
கால்பந்து விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க அதிக பயிற்சி மையங்கள் வேண்டும். வெளிநாடுகளில் 8 வயதில் இருந்தே பள்ளிகளில் கால்பந்திற்கு பயிற்சி கொடுக்கின்றனர். இந்தியாவில் 14 வயதுக்கு மேல் தான் பயிற்சியும், விளையாட அனுமதியும் கொடுக்கிறார்கள். கால்பந்து விளையாடும் வகையில் இயற்கை, செயற்கை புல் தரைகள் தேவை. மாவட்ட விளையாட்டு அரங்கில் அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் அலுவலக வசதி கொடுக்க வேண்டும். தனியார் நடத்தும் போட்டிகளில் அரசு பண உதவி வழங்க வேண்டும். சண்முகம் கால்பந்து சங்க செயலாளர் திண்டுக்கல்
ஊக்குவிக்கும் அரசு திட்டங்கள்
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு 40 வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் அதிகளவில் மாவட்டம், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்களுக்கு பயிற்சியுடன் கூடிய விடுதி, மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்கள் சாதிக்கலாம்.சவுந்தரராஜன் மாவட்ட விளையாட்டு அலுவலர் திண்டுக்கல்
மாவட்ட பயிற்சியாளர் தேவை
நான் சர்வதேச அளவில் விளையாடி உள்ளேன். வீரர்கள் மட்டுமின்றி, எல்லோரும் எளிதாக விளையாடக் கூடிய விளையாட்டு இது. இதில் திறமையை வளர்த்து கொள்ள மாவட்டம் வாரியாக சிறப்பு பயிற்சியாளர்கள், சிரமமின்றி விளையாட நவீன ஆடுகளம் வேண்டும். இந்த விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களை அரசே வழங்க வேண்டும்.
பி.பரமசிவம், பாட்மின்டன் வீரர்
தனிக்கவனம் வேண்டும்
தேசிய விளையாட்டுகள் பலவற்றில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். தமிழக வீரர்களுக்கு குத்துச் சண்டையிலும் ஆர்வம் அதிகம். குத்துச் சண்டைக்கு தனிப் பயிற்சியாளர்களை நியமித்தால் அதிலும் வீரர்கள் சாதிக்கலாம். மற்ற போட்டிகளை போல் இதற்கும் மாவட்டம், மாநிலம், தேசிய என பல்வேறு கட்ட போட்டிகள் நடத்த வேண்டும். இந்த விளையாட்டிற்கு தமிழகத்தில் தனி மவுசு இருக்கிறது. இதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
பி.கவுதமன், குத்துச்சண்டை வீரர்
இந்திய அணியில் இடம்
ஆறாம் வகுப்பு முதல் பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பயிற்சியாளர் விக்டர் ஊக்கமளிக்கிறார். சீனியர் ஸ்டேட் போட்டி, ஊரக மாநில போட்டியில் விளையாடி வருகிறேன். கடந்த ஆண்டு உ.பி.,யில் நடந்த சீனியர் தேசிய போட்டியில் தமிழ்நாடு அணிக்காக பங்கேற்றேன். தற்போது வருமானவரி அணிக்காக விளையாடுகிறேன். இந்திய அணியில் இடம்பெற்று நாட்டுக்காக விளையாடுவதே என் குறிக்கோள். இவ்விளையாட்டு மேம்பட மாவட்டம்தோறும் அதிக மாணவர்களை தேர்வு செய்து ஊக்கப்படுத்த வேண்டும்.எம்.தீபக் கணேஷ், தேசிய ஹாக்கி வீரர்
எங்களுக்கும் வாய்ப்பு மனோஜ், (மாற்றுத் திறனாளி)ஈட்டி, குண்டு எறிதல்
சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தது. கல்லுாரி காலத்தில் ஈட்டி, குண்டு எறிதலில் முறையாக பயிற்சி பெற்றேன். தேசிய, மாநில போட்டிகளில் விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளேன். கனடாவில் நடந்த குள்ளமானவர்களுக்கான உலக போட்டியில் ஈட்டி எறிதலில் ஒரு தங்கம், குண்டு மற்றும் வட்டு எறிதலில் 2 வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். மாற்றுத் திறனாளிகள் பலர் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு தனியே பயிற்சியாளர் தேவை. மாற்றுத் திறனாளிகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். நாடுகளுக்கு இடையேயான போட்டியில் எங்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
பெற்றோர் ஒத்துழைப்பு
நான் 25 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். இந்த விளையாட்டிற்கு பெற்றோர்கள், பள்ளியின் ஒத்துழைப்பு தேவை. பள்ளி, கல்லுாரிகளில் பிற விளையாட்டுகள் போல் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும். மற்ற விளையாட்டுகளை போல், இதற்கும் அரசு உதவ வேண்டும். இந்த விளையாட்டிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அரசு உதவினால் இந்த விளையாட்டிலும் வீரர்கள் சாதனை படைப்பார்கள். வெங்கட்டராமன் கிரிக்கெட் சங்க செயலாளர் திண்டுக்கல்.
வீரர்களுக்கு சலுகைகள் ரஞ்சித்குமார், மாற்றுத்திறனாளிகள் தடகள பயிற்சியாளர், மதுரை
மாற்றுத் திறனாளிகளும் மாநிலம், தேசிய, உலக அளவில் பல போட்டிகளில் சாதித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி அல்லாத விளையாட்டு வீரர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. பிற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே போல் விளையாட்டில் ஆர்வம், திறமையுள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அரசு ஊக்கத் தொகை, சலுகைகள் வழங்கலாம். அவர்கள் தங்கி பயிற்சி பெற விடுதி, பயிற்சி கூடம் கட்டித்தர வேண்டும். விளையாட்டு மைதானத்தில் சாய்தள தரைகள், நவீன கழிப்பறை வசதிகள் அமைத்து தர வேண்டும். இதெல்லாம் கிடைத்தால் இன்னும் அதிகமான வீரர்களை உருவாக்க முடியும், இந்தியாவிற்கும் பெருமை வந்து சேரும்.
இளைஞர்களுக்கு ஊக்கம்
மதுரையை சேர்ந்த நான், வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காகவே திண்டுக்கல் பள்ளியில் சேர்ந்து படிக்கிறேன். 8ம் வகுப்பு படிக்கும் போது தேசிய விளையாட்டில் பங்கேற்றேன். இதற்கு ஊக்கப்படுத்தியவர் பயிற்சியாளர் மாதவன். கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த தேசிய போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்றேன். இந்திய அணியில் உறுதியாக இடம்பிடிப்பேன். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கினால் இளைஞர் பலர் ஆர்வம் காட்டுவர்.ஆர்.அருண்பாண்டியன் வாலிபால் வீரர்