ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?
உடல் உறுப்புகளின் அமைப்பையும் பாதிப்பையும் கண்டறிய எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப் பலதரப்பட்ட பரிசோதனைகள் வரிசைகட்டி நின்றாலும், அந்த உறுப்புகளுக்கு ரத்தத்தைக்கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் வெளி அமைப்பு, உள் அமைப்பு, ரத்த ஓட்டத்தின் நிலைமை போன்றவற்றைத் தெளிவாகவும் துல்லியமாகவும் கண்டறிய ஒரு சிறப்புப் பரிசோதனை உள்ளது. அது ‘ஆஞ்சியோகிராபி’ (Angiography). இந்தப் பரிசோதனைப் படங்களுக்கு ‘ஆஞ்சியோகிராம்’ (Angiogram) என்று பெயர்.
சி.டி. ஸ்கேனைப்போலவே இதுவும் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைதான் என்றாலும், ஒரு வித்தியாசம் உண்டு. ரத்தக்குழாய்களின் மீது எக்ஸ் கதிர்களை நேரடியாகச் செலுத்தினால், படம் எடுக்க முடியாது. அயோடின் கலந்த ஒரு சாயத்தை ரத்தக்குழாய்க்குள் செலுத்திய பிறகு, அதன் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்தினால், படம் எடுக்க முடியும். அதில் ரத்தக்குழாயின் எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
ஆஞ்சியோகிராம் வகைகள்
ஆஞ்சியோகிராம் எடுக்கப் படும் விதத்தைப் பொறுத்து இதில் பல வகை உண்டு. முக்கியமானவை இவை:
1. டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராபி (Digital Subtraction Angiography - DSA).
2. கம்ப்யூடட் டோமோகிராபி ஆஞ்சியோகிராபி (Computed Tomography Angiography - CTA).
3. மேக்னடிக் ரெசனன்ஸ் ஆஞ்சியோகிராபி (Magnetic Resonance Angiography - MRA).
4. கரோனரி ஆஞ்சியோகிராபி (Coronary Angiography - CA).
1. டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராபி
ஆஞ்சியோகிராபி பரிசோதனைகளில் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான். உடலுக்குள் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி ரத்தக்குழாய்களின் (Arteries) நிலைமையைத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது. ஒரு கணினியின் உதவியுடன், இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எந்தத் தமனியைப் பரிசோதிக்க வேண்டுமோ, அதை முதலில் ஒரு எக்ஸ்ரே படம் எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்தத் தமனிக்குள் ஒரு சாயத்தைச் செலுத்தி, மறுபடியும் ஒரு எக்ஸ்ரே எடுக்கிறார்கள். இக்கருவியில் உள்ள கணினி இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, அருகில் உள்ள உறுப்புகளின் பிம்பங்களை மறைத்து, டிஜிட்டலில் ஒரு படத்தை வடிவமைத்துத் தருகிறது. அந்தத் தமனிக் குழாய் இயல்பாக உள்ளதா, சுருங்கியுள்ளதா, அதனுள் அடைப்பு உண்டாகியுள்ளதா என்பது போன்ற விவரங்களை, அந்தப் படத்தில் அறியலாம்.
பயன்கள் என்ன?
# கழுத்து, மூளை, சிறுநீரகம், கால்கள் ஆகியவற்றின் தமனிக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்கிறது.
# முக்கியமாக, ஒருவருக்குப் பக்கவாதம் வர வாய்ப்புள்ளதா என்பதையும் ரத்தக்குழாய்களில் வீக்கம் உள்ளதா என்பதையும் இதில் தெரிந்துகொள்ள முடியும்.
# நுரையீரலில் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism) ஏற்பட்டுள்ளதை அறியலாம்.
# காலில் ‘அழுகல் நோய்’ (Gangrene) இருக்கிறதா என அறியலாம்.
# சிறுநீரகத்தில் ரத்தக்குழாய் சுருங்கி உள்ளதா (Rena#artery stenosis) என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
# பிறவியிலேயே ரத்தக்குழாய் அமைப்பில் மாறுபாடு உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
2. கம்ப்யூடட் டோமோகிராபி ஆஞ்சியோகிராபி
ஏறக்குறைய முதலில் சொல்லப்பட்டது போல்தான் இந்தப் பரிசோதனையும் செய்யப்படுகிறது, சில வித்தியாசங்களுடன். இதில் உடலுக்குள் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரை ரத்தக்குழாய்க்குள் (Vein) சாயம் செலுத்தப்படுகிறது. வழக்கத்தில் தொடை அல்லது கையில் உள்ள சிரை ரத்தக்குழாய் வழியாகவே சாயம் செலுத்தப்படும். அடுத்து, சி.டி.ஸ்கேன் கருவியைக்கொண்டு இது செய்யப்படுகிறது. மிகக் குறைந்த நேரத்தில், உடலில் சாயம் பயணிக்கும் ரத்தச் சுற்றோட்டப் பாதை முழுவதையும் ஸ்கேன் செய்ய முடியும். அதன் பலனால், உடலின் எல்லா ரத்தக்குழாய்களின் நிலைமையை அறிய முடியும்.
பயன்கள் என்ன?
# டிஜிட்டல் சப்ட்ராக்சன் ஆஞ்சியோகிராபியில் சொல்லப்பட்ட அத்தனை பயன்களும் இதிலும் உண்டு.
# அத்துடன் இதயத் தமனி ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளையும் (Coronary Artery Disease CAD ) இதில் காணலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
# பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, அவற்றைத் தடுத்துக்கொள்ள முடியும்
# இப்பரிசோதனையில் ரத்தக் குழாய்கள் முப்பரிமாணப் படங்களாகத் தெரிவதால், நோயை மிகச் சரியாகக் கணிக்கமுடியும்.
3. மேக்னடிக் ரெசனன்ஸ் ஆஞ்சியோகிராபி
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதுபோலத் தான் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. தொடை அல்லது கையில் உள்ள சிரை ரத்தக்குழாய் வழியாகச் சாயம் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்களைப் படமெடுக்கிறார்கள். மிக வேகமாகவும், மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் முப்பரிமாணப் படங்கள் கணினித் திரையில் தெரியும். ரத்தக்குழாய் நோய்களைக் கண்டுபிடிப்பதில் இந்தப் பரிசோதனை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பயன் என்ன?
# கழுத்து, மூளை, மார்பு, வயிறு, சிறுநீரகம் மற்றும் கால்களில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், சுருக்கம், அடைப்பு, பிறவி அமைப்புக் கோளாறு ஆகிய பாதிப்புகளைக் கண்டறிய இது உதவுகிறது.
# இதய ரத்தக்குழாய் பாதிப்புகளை அவ்வளவாக இதில் அறிய முடியாது என்பது ஒரு குறை.
4. கரோனரி ஆஞ்சியோகிராபி
இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோனரி தமனிக் குழாய்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான பரிசோதனை இது. இந்த ரத்தக்குழாய்கள் சுருங்கிவிட்டாலோ, கொழுப்பு அடைத்துக்கொண்டாலோ இதயம் துடிப்பதற்குச் சிரமப்படும். இதைத்தான் ‘மாரடைப்பு’என்கிறோம்.
இது, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் பரிசோதனை என்பதால், இதை ‘உயிர் காக்கும் பரிசோதனை’ என்கிறோம். இந்தப் பரிசோதனையை ‘கேத் லேப்’(Cath Lab) வசதி உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
மேல் தொடையில் அல்லது மணிக்கட்டுக்கு அருகில் சிறிய துளை போட்டு வளைகுழாயும் (Catheter), வளைகம்பியும் (Guiding Wire) இணைந்த ஓர் அமைப்பை அங்குள்ள தமனி ரத்தக்குழாய்க்குள் நுழைத்து, `ஃபுளூரோஸ்கோப்’ எனும் சிறப்பு எக்ஸ்ரே கருவியில் கண்காணித்துக்கொண்டே கரோனரி தமனி குழாய்க்குக்கொண்டு செல்கிறார்கள். பிறகு, அதே வளைகுழாய் வழியாக இதயத் தசைக்கு ஒரு சாயத்தை அனுப்புகிறார்கள். சாயம் கரோனரி ரத்தக்குழாய்களை அடைந்ததும், அதைப் படமெடுக்கிறார்கள். அந்தப் படங்களில் கரோனரி ரத்தக்குழாய்களின் நிலைமை துல்லியமாகத் தெரியும்.
என்ன பயன்?
# ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைத் துல்லிய மாகத் தெரிந்துகொள்ள முடியும்.
# கரோனரி ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்துள்ளதா, ரத்தம் உறைந்துள்ளதா, எந்த இடத்தில் அடைப்பு உள்ளது, எத்தனை ரத்தக்குழாயில் எத்தனை சதவீதம் அடைப்பு உள்ளது, அடைப்பின் தீவிரம் ஆகிய பல விவரங்களோடு மாரடைப்பின் தீவிரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
# மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை செய்வது என்று தீர்மானிக்க முடியும்.
# பொதுவாக, இரண்டு ரத்தக் குழாய்கள் அடைத்துக்கொண்டிருந்தால் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
# மூன்று ரத்தக்குழாய்களிலும் அடைப்பு இருக்கிறது என்றால், பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
# சிலருக்கு மூன்று ரத்தக்குழாய்களிலும் அடைப்பு இருந்து, பைபாஸ் சிகிச்சையை மேற்கொள்வதற்கு உடல்நிலை ஏற்றதாக இல்லை என்ற நிலைமையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்படுவதுண்டு.
தயாராவது எப்படி?
# இப்பரிசோதனைகளை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
# ஏற்கெனவே சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகளுக்குச் சொல்லப்பட்ட முன்னேற்பாடு விதிகள் இதற்கும் பொருந்தும்.
யாருக்கு விலக்கு?
# கர்ப்பிணிகள், கர்ப்பமடைய வாய்ப்புள்ளவர்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியக் குறிப்பு
# தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் களுக்குச் சாயத்தைக் கொடுத்துப் பரிசோதனை செய்ய நேர்ந்தால், அடுத்து எத்தனை மணி நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.