நோய் தீர்க்கும் ராசி மரங்கள் : மீன ராசி ஆலமரம்
மரங்களில் ஆலமரம் புத்தருக்கு போதி மரமாகவும், இந்துக்களுக்கு கோவில் மரமாகவும், ஜைனர்களுக்கு கேவலா மரமாகவும் திகழ்கிறது. இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு.
கோவில் மடாதிபதிகள் கையில் வைத்திருக்கும் தண்டும் ஆல மரத்தில் இருந்தே செய்யப்பட்டதாக இருக்கும். இந்து சமுதாய மக்கள் ஆலமரத்தைச் சுற்றி வரும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
மனிதன் ஆலமரத்தடியில் தங்கினால் அமைதி கிடைக்கும். ஆலமரம் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கும், வியாழக்கிழமையில் பிறந்தவர்களுக்கும், பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்களுக்கும் நன்மையைத் தரும் மரமாகும்.
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2 வகையான குணங்கள் இருக்கும். அனைவருடனும் பகைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். இவர்களின் கால் பாதங்கள் கடுமையாகப் பாதிக்கக் கூடும். பஞ்சபூதங்களில் இது நீருடன் தொடர்பு கொண்டது.
மேற்கண்ட ராசி, நாளில் பிறந்தவர்கள் ஆலமரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம். இதனால் ஆலமரத்தில் அடங்கி இருக்கும் நல்ல மின்காந்த, கதிர்வீச்சுகள் மனித உடலுக்கு மாற்றலாகி உடலுக்கு வலிமை கொடுப்பதுடன், ஆலமரம் வியாழன் கிரகம் மற்றும் மீனம் ராசி, நட்சத்திர மண்டலத்தின் நல்ல கதிர்வீச்சுகளை உறிஞ்சி தன் உடலுக்குள் நிரப்பிக் கொள்ளும். இதுவே மருத்துவகுணம் என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகின்றது.
மீனம் ராசி மண்டல நட்சத்திரக் கூட்டம் மற்றும் வியாழக் கிரகத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் உண்டாக்கும் நோய்களையும், கெடுதல்களையும், தோஷங்களையும் ஆலமரம் நீக்குகிறது.
மருத்துவ குணம்
பட்டை: ஆலமரத்தின் புதிய பட்டையை உலர வைத்து, அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை என 2 வேளை 4 கிராம் அளவு வரை சாப்பிடலாம். இதனால் வெட்டை நோய் குணமாகும். ஆண்களுக்கு ஏற்படும் விரைவில் விந்து வெளியேறுதல் எனும் நோய் குணமாகும்.
பழம்: நன்றாகப் பழுத்த ஆலம் பழத்தை நிழலில் உலர வைத்துச் சாப்பிட்டால் ஞாபக சக்தி மேம்படும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
பசுங்கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.
குச்சிகள்: ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.
பூக்கள்: பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.
விழுதுகள்: தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
இலைகள்: ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
பால்: பற்கள் வலுவில்லாமல் ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆலமரத்துப் பாலை துணியில் நனைத்து அந்தப் பற்களின் இடையில் வைத்தால் பற்கள் சுலபமாகக் கழன்று விழுந்து விடும்.
ஆடும் பற்களைத் தவிர மற்ற பற்களில் படும்படி வைத்தல் கூடாது.
ஆலமரத்தைப் பொதுவாக பல இடங்களிலும் காணலாம்.