தேவைதான் ஆனால் இப்போதல்ல!
பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகும் மாணவர்கள் மட்டுமன்றி, பெற்றோரும் விரும்பக் கூடியத் துறைகளில் முதன்மை பெற்றிருப்பது உயிரைக் காக்கும் மருத்துவம்தான். இந்தப் படிப்பை நாடு முழுவதும் 456 மருத்துவக் கல்லூரிகள் வழங்கி வருகின்றன.
இவற்றில் மொத்தம் 49,990 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில், அரசுக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு இடங்கள் 25,330. தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 24,660 இடங்கள் உள்ளன.
அதாவது, அரசுக் கல்லூரிகளிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஏறத்தாழ சம அளவிலான இடங்கள் உள்ளன. எனவே, இந்தப் படிப்புக்கான இடங்களுக்கு முறைகேடுகள் ஏதுமின்றி மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், தரமான மருத்துவர்கள் உருவாவதை உறுதிப்படுத்தவும் அகில இந்திய அளவில் ஒரேயொரு நுழைவுத் தேர்வாக தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') நடத்துவது என்பது வரவேற்கத்தக்கதுதான். கொள்கை அளவில் இது நல்ல விஷயம்.
ஆனால், நாடு முழுவதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் ஒரே மாதிரியான நடைமுறையை அறிமுகம் செய்யாமல், திடீரென குறிப்பிட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் நுழைவுத் தேர்வை கட்டாயப்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
நாடு முழுவதும் 13 வகையான இடைநிலைக் கல்வி வாரியங்கள் உள்ளன. இந்தக் கல்வி வாரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் வெவ்வேறு வகையான பாடத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரி பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
சமச்சீர் பாடத் திட்டம் வரவேற்கத்தக்க நடைமுறை என்றபோதும், இந்தக் கல்வி முறையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டம் ஏனோ மேம்பட்ட அளவில் இல்லாமல், கீழ்மட்ட அளவில் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் களைவதற்கான நடைமுறைகள் இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெறச் செய்யப்படவில்லை. அதாவது, நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய புரிதல், கல்விச் சூழல், வளங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கக் கூடிய வழிகள் இந்தப் பாடத் திட்டத்தில் இல்லை.
அது மட்டுமன்றி, இந்தப் பாடத் திட்டத்தை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தோடு ஒப்பிடும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்போல வேறுபாடுகள் உள்ளன.
மாநிலக் கல்வி வாரியங்களைப் பொருத்தவரை, பொதுவாகவே மனப்பாடக் கல்வி முறையை ஊக்குவிக்கக் கூடிய வகையிலேயே பாடத் திட்டங்கள் அமைந்திருக்கின்றன. கேள்விக்கு இதுதான் பதில் என்ற முறையிலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுகின்றனர். பாடங்களைப் புரிந்து படிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
ஆனால், மத்திய கல்வி வாரியத்தை (சிபிஎஸ்இ) பொருத்தவரை, பாடங்களைப் புரிந்து படிப்பதற்கே அதிக முக்கியத்துவதும் அளிக்கப்படுகிறது. தேர்வுகளிலும் மாணவர்களின் புரிதலைச் சோதிக்கக் கூடிய வகையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதன் காரணமாகவே போட்டித் தேர்வுகளில் மத்திய கல்வி வாரிய மாணவர்கள் எளிதில் சாதிக்க முடிகிறது.
மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களோ போட்டித் தேர்வுகளை சந்திக்கவே திணறுகின்றனர்.
எனவே, பள்ளிக் கல்வியில் அரசியல் பார்க்காமல், மாணவர்களே நாட்டின் நாளைய முதுகெலும்பு என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் இந்த வேறுபாட்டை முதலில் களைய முயற்சிக்க வேண்டும்.
பள்ளிக் கல்விக்கு குறைந்தபட்ச பாடத் திட்டத்தை உருவாக்கி, அதை நாடு முழுவதும் உள்ள 13 கல்வி வாரியங்களும், மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் கட்டாயமாக்க வேண்டும்.
மாநில அரசுகள் தங்களின் தனிப்பட்ட உரிமை பறிக்கப்படுவதாக எண்ணாமல், மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அவ்வாறு, நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் குறைந்தபட்ச பாடத் திட்டத்தை நடைமுறைபடுத்தி, அனைத்துத் தரப்பு மாணவர்களும் இணையான திறனை பெற்ற பிறகே மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்வது நியாயமாக இருக்கும். சமூக நீதி பாதுகாக்கப்படும்.
இல்லையெனில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலும், கிராமப்புறங்களிலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது பல ஆண்டுகளுக்கு எட்டாக் கனியாகவே ஆகிவிடும்.
ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான தடைக் கற்கள்: உயர் கல்வியைப் பொருத்தவரை, தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலான தமிழகப் பல்கலைக்கழகங்கள் தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) "ஏ' கிரேடு தரச் சான்று பெற்றவையாகவே உள்ளன. கல்லூரிகளைப் பொருத்தவரை, 42 சதவீதம் "ஏ' கிரேடு பெற்றுள்ளன.
பிகார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தரமான உயர் கல்வி வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே, அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்விக்கு பெரும்பாலும் தமிழகக் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்கின்றனர்.
இருந்தபோதிலும், தமிழகத்தில் உள்ள மாநில அரசு கல்வி நிறுவனங்களை, மத்திய அரசு கல்வி நிறுவனங்களோடும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களோடும் ஒப்பிடும்போது ஆராய்ச்சி மேம்பாட்டிலும், உயர் கல்வி மேம்பாட்டிலும் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் காணப்படுகிறது.
ஐஐடி, ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் கழகம்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீடும் தாராளம். இதனால், மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகின்றன.
அதுபோல, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்களை ஒப்பீடு செய்து அதற்கேற்ப தங்களுடைய உயர் கல்வி பாடத் திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. தலைசிறந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்களையும் அறிமுகம் செய்கின்றன.
ஆனால், நிதி ஆதாரம் இன்மையும், பாடத் திட்டத்தை மாற்றிக் கொள்வதில் சுதந்திரம் இல்லாததும், மாநில அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தடைக் கற்களாக உள்ளன.
பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற கல்விக் குழு ஒப்புதல், ஆட்சிமன்றக் குழு ஒப்புதல், துணைவேந்தர், அரசுச் செயலர் என மிக நீண்ட நடைமுறையை மாநில அரசு பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே, மாநில அரசு கல்வி நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி, சர்வதேச அளவில் ஏற்படுகிற மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது பாடத் திட்டத்தை உடனடியாக மாற்றிக்கொள்ளும் வகையிலான முழுச் சுதந்திரமும், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு தாராளமான நிதியும் மாநில அரசு கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அப்போதுதான் சர்வதேச தரத்திலான உயர் கல்வி, அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்க வழி ஏற்படும்.