‘செல்’ என்பதன் பெயர் காரணமும் கண்டுபிடிப்புப்பற்றிய தகவல்களும்!
‘செல்’ எனும் வார்த்தைப் பிரயோகமே, 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பவர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல, உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள, ‘செல்’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.
அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி, தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம், ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.
தொடக்க காலகட்டங்களில், இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு, அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி, செல்லின் மையப் பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) என பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடி க்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது. பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது.
மேலும், பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற்கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரியா (Mitochondria) என்று அழைக்கிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனாக, 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு, உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப் பட்டிருந்ததை அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மரபணுக் கூறான, டி.என்.ஏ. (D.N.A) வில், பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல லட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது அறிவியல் மேதைகளுக்கே தலை சுற்றுவதாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் என்பவர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்ற அறிவிப்பைச் செய்தார்.
Related Posts