மனித மனதின் ஆற்றலும் அதன் சீரிய தன்மைகளும்!
பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த மிகப்பெரு மாறுதல் மனம். சில உளவியலாளர்களின் கருத்துப்படி, மனமானது நமது மூளையில் உருவாகும் ஒட்டுமொத்த சிந்தனைகளின் மையமாக கருதப்படுகிறது. ஆனால், உடலில் இதன் அமைவிடத்தையோ அதன் உருவத்தையோ இதுவரை எவராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. மேலும் சில பெளதீகவியலாளர்களின் கருத்துப்படி, மனமானது நம்மைச் சுற்றியுள்ள கோள வடிவான சிந்தனைவெளி என்றும், கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் அவ்வெளியின் கனவளவானது, அவரவர்களின் எண்ணங்களின் பரிமாணங்களிற்கேற்ப சுருங்கி விரியும் தன்மையுள்ளதென்றும், அதன் கனவளவு குறுகும்போது, மனதின் ஆற்றல் பெருமளவு அதிகரிக்கின்றது என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில் உருவமற்ற, உணர மட்டுமே கூடிய மனதை, ஒரு பேராற்றலாகவே கருத முடியும். நம்மில் பலர் மனதின் உண்மையான ஆற்றலை அறியாது அவ்வாற்றலை விரயமாக்குகிறோம்.
மனதை பொதுவாக நாம் இரண்டு பகுதிகளாகக் கொள்ளலாம். நமது அன்றாட கடமைகளில், ஈடுபட உதவுவதும் நம்மை முழுமையாக ஆட்கொண்டிருப்பதுமான புறமனம், நம்மில் பலர் உணர்ந்து கொள்ளாததும், எப்போதும் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதுமான ஆழ்மனம். புறமனமானது சதாகாலமும் நமது எண்ணங்களின் குப்பைக் கூடையாகவே காணப்படுவதுடன், ஆழ்மனத்தை ஒரு மாயத் திரையாக இருந்து மறைக்கின்றது. நாம் சற்று அமைதியான நேரத்தில் கண்ணை மூடியிருக்கும்போது, நம் புறமனதில் ஒன்றன்பின் ஒன்றாக எதோவொரு நூலிழை தொடர்பில் ஒட்டிக்கொண்டு எண்ணற்ற எண்ணங்கள் ஊற்றெடுப்பதை உணர முடியும். அவ்வெண்ணங்களை நாம் நிறுத்த முயற்சிக்கும்போது, அவ்வெண்ணவூற்று மேலும் வலுவடைவதை அறியலாம். அப்பேராற்றலில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்த முயன்று, பலரும் தோற்றுப்போகின்றனர். அதற்குக் காரணம் புறமனதில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை புறமனதைக் கொண்டே கட்டுப்படுத்த முயன்றதேயாகும்.
இவ்வூற்றெடுக்கும் எண்ணங்களை அவற்றின் போக்கிலேயே விட்டு நாம் ஒரு சாட்சியாக இருந்து அவற்றை கவனிக்கும்போது, பலநாள் முயற்சியின் பின், ஊற்றெடுக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றாக அதில் கரைந்து செல்வதை உணரலாம். இவ்வாறு மனதின் ஆற்றலானது, ஒருமுகப்படுத்தப்படும் போது, அது நம்முள் மறைந்து கிடக்கும் சக்தியை உயிர்ப்பூட்டுவதாக நம்பப்படுகிறது.