நலம் தரும் யோகா!
எத்தனையோ அரிய கலைகள் தோன்றிய நம் இந்திய நாட்டில் தோன்றிய ஓர் ஒப்பற்ற கலைதான் யோகக்கலை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித சமுதாயம் உடல், உள்ளம், ஆரோக்கியம் பெற்றுத் திகழ, யோகிகளால் எளிமையான முறையில் எந்தப் பொருள் செலவும், உபகரணங்களுமின்றி அனைவரும் செய்து பயன் பெற ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. யோகக் கலையை முறைப்படுத்தி அட்டாங்க யோகம் என்ற முறையில் படிப்படியாக உயர்நிலையை அடைவதற்கான வழிமுறைகளை நமக்கு வகுத்துத் தந்தவர் பதஞ்சலி முனிவர்தாம்.
யோகா என்ற வடமொழிச் சொல் இணைப்பு என்ற பொருள் உடையது. உடலையும் உள்ளத்தையும் இணைத்தல், உள்ளத்தையும் உயிரையும் இணைத்தல், உயிரையும் பரம் பொருளையும் இணைத்தல் என்று பொருள்படும். யோகா என்பது முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் மட்டும் உகந்தது என்று தவறாகக்
கருதிவந்தனர். உண்மையில் இல்லறத்தில் வாழ்பவர்கட்கும் இது மிகவும் அவசியமாகும்.
எல்லா வகையான இன்பங்களையும் துய்க்க யோகப் பயிற்சிகள் நமக்கு உதவும். உடலும், உள்ளமும் இணைந்து செயல்பட்டால்தான் வாழ்க்கையில் இன்பங்கள் கிட்டும். மேலும், மேலும் முற்காலக் குருகுலக் கல்விமுறையில் யோகப் பயிற்சிகளைக் குருவின் துணையோடு முறையாகப் பயின்று தினமும் செய்து பயன்பெற்றுள்ளனர். முதுமையில் யோகாவை வைத்துக் கொள்ளலாம் என்று இல்லாமல் இளமையிலிருந்தே செய்து வந்தால் முதுமை என்பது சீக்கிரம் வராமல் காத்து, நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.
குறிப்பாக உடல் உழைப்பு இல்லாத அனைவருக்கும் யோகா ஒரு வரப்பிரசாதமாகும். தற்கால வாழ்க்கை முறையில் அனைத்தும் இயந்திரமாகிவிட்ட நிலையில் உடலுக்கு இயல்பாகக் கிடைக்கும் பெரும்பாலான பயிற்சிகள் இல்லாமல் போய் விட்டன. மருத்துவர்கள் பெரிதும் வலியுறுத்திய பின்பே நடைப்பயிற்சியும், யோகாவும் செய்ய முன்வருகின்றனர். எந்த வயதினரும் செய்வதற்கு ஏற்ற யோகாவை முறையாக ஒரு யோகாசிரியரின் துணையோடு பயின்று கொண்டபின் அவரவர் வீட்டிலே காற்றோட்டமான இடத்தில், காலை நேரத்தில் வெறும் வயிற்றுடன் செய்து பயன் பெறலாம்.
தேர்வுக்காக மாணவர்கள் பாடங்களைப் படிப்பது போல், யோகாவைப் போட்டிக்காக என்று சிறுவர், சிறுமியரைத் தயார் செய்து போட்டிகளில் வெற்றி பெறுவதுதான் குறிக்கோள் என்ற நிலை அத்துணை ஆரோக்கியமானதல்ல. யோகா ஒவ்வொரு தனி மனிதனின் ஆரோக்கியத்திற்கானது. எத்தனையோ பணிகளுக்கிடையிலும் நம் முன்னாள் பிரதமர்களான ஜவாஹர்லால்நேரு, மொரார்ஜி தேசாய் போன்றோர் தினமும் யோகா செய்து பயன்பெற்றவர்கள்.
பள்ளிகளில் வாரந்தோறும் ஒவ்வொரு வகுப்பிற்கும் இரண்டு உடற்கல்விப் பாடவேளைகள் என்றிருந்ததை மாற்றி ஒரு பாடவேளை உடற்கல்வி மற்றும் விளையாட்டிற்கும், ஒரு பாடவேளை யோகாவிற்கும் என ஒதுக்கீடு செய்யப்பட்டு யோகாவிற்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் தோன்றிய இந்த யோகக் கலையின் மேன்மையை உணர்ந்த மேலை நாட்டவர்கள் இந்தியாவிலிருந்து சிறந்த யோகாசிரியர்களைத் தங்களது நாட்டிற்கு வரவழைத்து அவர்களின் மூலம் யோகப் பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு அவற்றை முறையாகச் செய்து பயன் அடைகின்றனர்.
அங்குள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளைத் தினமும் யோகா செய்து நீடித்த ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் பெறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். யோகாவின் மேன்மையைப் புரிந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக மக்கள் அனைவரும் யோகக்கலையால் பயன்பெறும் பொருட்டு ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படும் என கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த ஆண்டும் மாநிலத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
யோகப் பயிற்சிகளோடு உணவு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் யோகாவின் முழுப்பயனையும் பெறலாம். புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் இருந்தால் அதனை அறவே தவிர்த்தல். பசித்தபின் உணவு உண்ணல், வாரம் ஒரு நாள் அல்லது ஒரு வேளையாவது தண்ணீர்மட்டும் அருந்தி அல்லது பழச்சாறு மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல் (உபவாசம் உயரிய மருந்து) சீரண உறுப்புகளுக்கு ஓய்வும் புத்துணர்வும் கிடைத்திடும். தினமும் ஒரு வேளையாவது பழ உணவு மட்டுமே உண்ண முயல்வது, உணவில் காரம், புளி, உப்பு, சர்க்கரை, மைதா, மசாலா போன்றவற்றைக் குறைத்தல், இரவு உணவைப் படுக்கைக்குச் செல்வதற்குக் குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாகவே முடித்தல் நல்ல தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.
ஆர்வத்தின் காரணமாக யோகக்கலை தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு உடனே செய்யத் தொடங்குவதை விட யோகாசிரியரின் துணையோடு சில நாள்கள் பயிற்சிக்குப்பின் தினமும் நாமே வீட்டில் செய்துவரலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து காலை 6 மணிக்கு யோகா செய்வதை அன்றாடப் பழக்கமாக்கிடலாம். மொத்தத்தில் யோகா என்பது வாழ்வியல் நெறி வாழ்வோடு இரண்டறக்கலக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் செய்யக்கூடிய யோகப் பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறு சுறுப்புடனும், நினைவாற்றலுடனும், ஆரோக்கியமாகத் திகழ முடியும். தினம் தினம் யோகா செய்து வாழ்வில் நலம் பல பெற்றிடுவோம்.
(இன்று சர்வதேச யோகா தினம்)
இரா.இராஜாராம்
நன்றி தினமணி நாளிதழ்