ஆயுளை அதிகரிக்கும் சைக்கிள் பயணம்
வாரத்தில் 74 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், நமது வாழ்நாட்களில் 6 மாதகாலம் அதிகரிக்கும் என நெதர்லாந்து நாட்டு பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாவது: உலக சுகாதார மையத்தின் அட்டவணையின்படி, நெதர்லாந்தில் சுமார் 6,500 பேர் மரணத்திலிருந்து தப்பிக்க சைக்கிள் ஓட்டுகின்றனர். சைக்கிள் ஓட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் இருப்பதோடு, நமது ஆயுளையும் அதிகரிக்கும். அதன்படி, ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டுவது நமது வாழ்நாளில் ஒரு மணி நேரம் அதிகரிக்கும்.
வாரத்தில் சராசரியாக ஒருவர் 74 நிமிடங்களுக்கு சைக்கிள் ஓட்டினால், அவரது வாழ்நாளில் 6 மாதங்கள் அதிகரிக்கும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தில் சைக்கிள் பயணத்திற்கென 37,000கி.மீ., நீளத்திற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.