பூசணிக்காயின் நற்பலன்கள்
கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள். உணவுகளுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காவுமே பூசணியைப் பயிர் செய்கின்றனர்.
இது படர் கொடியைச் சேர்ந்தது. இக்காய்கறி பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்தி விடுகிறது. 1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.
உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.
மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும். நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.
இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும். பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.
மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும்.
இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.
பழுத்த பூசணியின் சதையைச் சாறாக்கிக் சர்பத் சேர்த்து அருந்தினால் உடல் வெப்பம் தணியும்; குளிர்ச்சி உண்டாகும். சூடான தோசை வார்க்கும் தட்டில் பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும்.
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.
தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும். பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும்.
புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும். வெளியில் பச்சை நிறத் தோலுடன் காட்சி அளிக்கும் பூசணிக்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர். இதில் சதை அதிகம் இருக்கும். இதுவும் காக்கை வலிப்பு, நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் முதலியவற்றைக் குணமாக்குகிறது.
எனவே, பூசணிக்காயை உங்கள் உணவில் ஒதுக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மருத்துவப் பயனையும் சத்துணவையும் அறிந்தால் உணவாகப் பயன்படுத்தி உடல் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.
பூசணிவிதையின் பலன்கள்
1/4 கப் பரங்கிக்காய் விதையில் இருந்து ஒரு நாளைக்கு வேண்டிய மக்னீசியத்தின் அளவில் இருந்து பாதி கிடைக்கும். இந்த மக்னீசியம் இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையானது. மேலும் இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், திடீரென மாரடைப்பு மற்றம் பக்கவாதம் வருவதைத் தடுக்கும். எனவே முடிந்த அளவில் அன்றாடம் உங்கள் உணவில் இதனை சேர்த்து வாருங்கள்.
நோயெதிர்ப்பு சக்தி மஞ்சள் பூசணியில் ஜிங்க் அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் மற்றும் சளி, காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து நம்மைக் காக்கும்.
வயதாக ஆக ஆண்களின் வலிமை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறையும். எனவே ஆண்கள் மஞ்சள் பூசணியின் விதைகளை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஜிங்க் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால் விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்.
ஆய்வில், பூசணி விதைகள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதாக தெரிய வந்துள்ளது.
தூங்கும் சில மணிநேரங்களுக்கு முன் பரங்கிக்காய் விதைகளை ஃபுரூட் சாலட்டில் தூவி உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.