டிரைவரில்லாமல் இயங்கும் உலகின் முதல் பஸ்: வெற்றிகரமாக சோதனை!
டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்க முன்னணி கார் நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளன. மேலும், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் டிரக்கை சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில், டிரைவரில்லாமல் இயங்கும் உலகின் முதல் பஸ்சை சீனாவை சேர்ந்த யூடாங் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மாதம் இந்த பஸ்சை செங்ஸோ நகரிலிருந்து கைஃபெங் நகருக்கு பொது சாலையில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்து காட்டியுள்ளது.
சோதனை வெற்றி செங்ஸோவிலிருந்து கைஃபெங் நகருக்கு இடையிலான 32.6 கிமீ தூரத்தை எந்த பிரச்னையும் இன்றி இந்த பஸ் கடந்தது. முன்னெச்சரிக்கையாக, பஸ்சின் இயக்கத்தை ஓட்டுனர் ஒருவர் கண்காணித்தபடி இருந்தார். ஆனால், பிரச்னை எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக பயணித்தது.
சிக்னல்கள் செங்ஸோ- கைஃபெங் நகரங்களுக்கு இடையிலான சாலையில் 26 போக்குவரத்து சிக்னல்கள் இருந்தன. அவற்றை, வெகு அழகாக கடந்ததுடன், முன்னால் சென்ற வாகனத்தை அழகாக முந்தி சென்றதுடன், தடம் மாறுவதிலும் சிறப்பாக செயல்பட்டதாக சோதனை நடத்திய எஞ்சினியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்ச வேகம் சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக மணிக்கு 68 கிமீ என்ற உச்சபட்ச வேகத்தை பதிவு செய்தது. கருவிகள் இந்த பஸ் மூன்றுவிதமான கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் செயல்படுகிறது. மேலும், பஸ்சின் நான்கு புறத்திலும் லேசர் ரேடார்கள், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றின் தகவல்களை அழகாக ஒருங்கிணைத்து இந்த பஸ் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
கடும் உழைப்பு மூன்று ஆண்டுகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியில், இந்த டிரைவரில்லாமல் இயங்கும் பஸ்சை தயாரித்துள்ளதாக யூடாங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு எஞ்சினியர்கள் தெரிவித்தனர்.
விபத்துக்கள் குறையும் போக்குவரத்து விதிமீறல், மனித தவறுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்களை இந்த டிரைவரில்லாமல் இயங்கும் பஸ்கள் மூலமாக குறைக்க முடியும் என்று யூடாங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரியான இடைவெளி அருகில் செல்லும் வாகனங்களுடன் சரியான இடைவெளியில் வேகத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைத்துக்கொள்ளும். இதன்மூலம், விபத்துக்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் சிக்கனம் இந்த பஸ்சில் இருக்கும் கம்ப்யூட்டர் மூலமாக, பஸ் மிகச்சரியாக இயக்கப்படுவதால், மிகுந்த எரிபொருள் சிக்கனமும் கிடைக்கும். இதனால், சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
முன்மாதிரி பஸ் எதிர்காலத்தில் பொது போக்குவரத்து துறையில், இதுபோன்ற டிரைவரில்லாமல் இயங்கும் பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதாக யூடாங் நிறுவன எஞ்சினியர்கள் தெரிவித்துள்ளனர்.