கற்றலா, கசடறக் கற்றலா?
அனைத்து மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளுடன் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் இரு நாள்களுக்கு முன்பு நடத்திய கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை "தடையில்லாத் தேர்ச்சி' (ஆல் பாஸ்) தரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என 19 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் முழு விருப்பமும் தடையில்லாத் தேர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதுதான் என்றாலும், அனைத்து மாநிலங்களும் தங்கள் கருத்தை எழுத்து மூலமாக உறுதிப்படுத்த அவகாசம் தந்திருக்கிறது. ஆகவே, எட்டாம் வகுப்பு வரை தற்போது மாணவர்கள் தடையில்லாத் தேர்ச்சி பெறும் நடைமுறை முடிவுக்கு வருவது உறுதி.
இத்தகைய முடிவை மத்திய அரசு எடுக்க மூன்று காரணங்கள். தடையில்லாத் தேர்ச்சி அளிப்பதால் மாணவர்களின் கல்வித் திறன் வளராமல் போய்விடுகிறது. 9-ஆம் வகுப்புக்கு வரும்போது, அரிச்சுவடிக் கணக்குகள் போடுவதற்கும், தாய்மொழியை எழுத்துக் கூட்டி வேகமாகப் படிப்பதற்கும்கூடத் திறன் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். தேர்வு இல்லை என்பதால் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அக்கறையின்மை காணப்படுகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
இந்த ஆய்வு முடிவுகள் உண்மையே. இத்தகைய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தடையில்லாத் தேர்ச்சி கூடாது என்ற எண்ணமே மேலோங்கும். இருப்பினும், ஏன் இந்த நடைமுறை பயனளிக்காமல் போனது என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், இதில் சிறார்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதும், கற்பித்தலில் ஏற்பட்ட தொய்வே காரணம் என்பதும் தெரியும்.
குழந்தைகள் சரியான முறையில் பாடத்தைத் தொடர முடியாத நிலையில், தேர்ச்சி அளிக்காமல் அதே வகுப்பில் நிறுத்தி வைக்கும் நடைமுறை இருந்தபோது, பள்ளியிலிருந்து இடைநிற்றல் விகிதம் மிக அதிகமாக இருந்தது. இதற்குக் காரணம், தங்களுக்குப் படிப்பு வராது என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடுவதாலும், அவர்களது நண்பர்கள் மேல்வகுப்புக்குச் செல்ல அந்தக் குழந்தை மட்டும் அதே வகுப்பில் நிறுத்தப்படுவது மன உளைச்சல் தருவதாலும், தங்கள் குழந்தைக்குப் படிப்பு வராது என்ற முடிவுக்கு பெற்றோர்களே வந்துவிடுவதாலும் மாணவர்கள் இடையிலேயே நின்று போனார்கள்.
இடைநிற்றலைக் குறைக்கத்தான் இலவச உடை, மதிய உணவு, இலவசப் புத்தகம், காலணி என எல்லா வகைகளிலும் அரசு ஊக்கப்படுத்துகிறது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் போதும், அவர்களை முதலில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக மாற்றினாலே போதும், அறிவுக் கண்ணைத் திறந்துவிட முடியும் என்ற நம்பிக்கையால்தான் இந்தக் குழந்தைகள் குறைந்தபட்சம் 14 வயது வரை பள்ளிக்கு வருவதையும், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறாமல் தடுக்கும் விதத்திலும், வீதிகளில் சுற்றித் திரிந்து கெடுவதைத் தவிர்க்கவுமே தடையற்ற தேர்ச்சி கொண்டு வரப்பட்டது.
மேலை நாடுகளில் தடையில்லாத் தேர்ச்சி நடைமுறை உள்ளது. அங்கே ஒரு குழந்தை ஒரு பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்றால், அந்தக் குழந்தையை அடுத்த வகுப்புக்கு அனுப்புவார்கள். ஆனால், தேர்ச்சி அடையாத பாடத்துக்கான கட்டாயத் தனி வகுப்புகளில், வகுப்பு ஆசிரியர் திருப்தி அடையும் வரை அந்த மாணவர் பங்கேற்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு தனியாக ஆசிரியர் பாடம் நடத்துவார்.
இவ்வாறான நடைமுறையை நாமும் மூன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கலாம். அடிப்படைக் கல்வியில் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை நான்காம் வகுப்புக்கு அனுப்பினாலும்கூட, அந்தக் குழந்தை தேர்ச்சி பெறத் தவறிய பாடத்தை தனி வகுப்பாக, அப்பள்ளியின் ஆசிரியர் கூடுதல் நேரம் செலவழித்து, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நடைமுறையை உருவாக்கலாம். அதற்கு ஆசிரியர்களின் கூடுதல் உழைப்பும், நேரமும் தேவை. அர்ப்பணிப்பு தேவை. இதற்கு பல ஆசிரியர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கும். அல்லது கூடுதல் படி, ஊதியம் எனப் பட்டியல் போடும்.
அடிப்படைக் கல்வித் திறன் குறித்த ஆய்வு முடிவுகளைத் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால், மாணவர்களின் கல்வித் திறன் அரசுப் பள்ளிகளில் மட்டுமே மிகக் குறைவாக இருப்பது வெளிப்படை. ஐந்து ஆண்டுகள் அரசுப் பள்ளியில் படித்த குழந்தைக்கு எளிய கணக்குகள் போடத் தெரியவில்லை, தாய்மொழியை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை என்றால் தவறு தொடக்கப் பள்ளி ஆசிரியரிடம்தான், குழந்தையிடம் அல்ல.
மத்திய அரசு தண்டிக்க வேண்டியது, ஒழுங்காகப் பள்ளிக்கு வராமலும் பாடம் நடத்தாமலும் ஆசிரியர் தொழிலைத் துணைத் தொழிலாகக் கருதுகிற தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களைத்தானேயொழிய, குழந்தைகளை அல்ல.
இரு தினங்களுக்கு முன்பு, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. அந்தந்தப் பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளும் அருகமை அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்தால், பள்ளிகளை உள்ளாட்சி அல்லது உள்ளூர் ரோட்டரி, அரிமா சங்கங்களின் பொறுப்பில் ஒப்படைத்தால், அரசுப் பள்ளி ஆசிரியர்களும், கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வுடன் கற்பித்தலை முழுமையாகச் செய்வார்கள்.
தேர்ச்சி பெறத் தவறும் பாடங்களுக்கு அடுத்த வகுப்பில் தனிவகுப்பு நடத்தி மாணவர்களை மேம்படுத்துவதை விடுத்து, தடையில்லாத் தேர்ச்சியை ரத்து செய்தால், மாணவச் சிறார்களின் இடைநிற்றல் விகிதம் மீண்டும் அதிகரிக்குமே, அதற்கென்ன செய்யப் போகிறோம்?
நன்றி : தினமணி