தைராய்டு கோளாறால் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது?
தைராய்டு சிகிச்சை, பாதிப்பு இரண்டிலும் கடந்த பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கோளாறு பற்றிய தவறான அபிப்ராயங்கள், குழப்பங்கள் அதிகமாகியபடியே இருக்கின்றன.
ஹைப்போ தைராய்டிசம் - 'தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அதை சரி செய்ய முடியுமா அல்லது வாழ்நாள் முழுதும் மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா?' என்று தினமும் ஒருவராவது என்னிடம் கேட்கும் கேள்வி இது!
உடல் எடையை குறைத்தால், ஹைப்போ தைராய்டிசம் தானாகவே சிலருக்கு சரியாகி விடும்; சிலருக்கு இந்தக் கோளாறு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து சர்க்கரைக் கோளாறை கட்டுக்குள் வைப்பதைப் போல, தைராய்டு சுரப்பை கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம், உணவுக் கட்டுப்பாட்டின் வாயிலாக உடல் எடை குறைந்தால், 'இன்பிளமேஷன்' எனப்படும் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சி குறையும்; தைராய்டு சுரக்கும் அளவு முன்பைவிட அதிகமாகலாம்.
தைராய்டு என்றில்லை, ஆர்த்தரைடீஸ், கேன்சர், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரைக் கோளாறு என்று வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அதிக கொழுப்பு, கார்போ ஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதால், தேவையற்ற கொழுப்பு உடலில் சேருவதே பிரதான காரணம்.
அதிகப்படியான கொழுப்பு, உடலின் எந்தப் பகுதியில் அதிகம் படிகிறதோ, அந்தப் பகுதியில் அழற்சி ஏற்படும். இது தீக்காயம் பட்டால் ஏற்படுவதைப் போன்று, கொழுப்பு படிந்த இடத்தில் உள்ள செல்கள், திசுக்களை பாதிக்கும்.
கொழுப்பால் ஏற்படும் அழற்சி, ரத்தக் குழாய்களின் உள்ளே இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் வரலாம். மூட்டுகளில் இருந்தால் ஆர்த்ரைடிஸ், கணையத்தில் சேர்ந்தால் சர்க்கரைக் கோளாறு, இப்படி எந்த இடத்தில் கொழுப்பு படிகிறதோ, அதற்கேற்ப கோளாறுகள் வரும்.
ஹைப்பர் தைராய்டிசம் - தைராய்டு தேவைக்கு அதிகம் சுரந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரைகளை சாப்பிட்டால் சரியாகி விடும்.
இந்தக் கோளாறால் உடல் எடை ஏறும்; குறையாது என்பதும் தவறு. தைராய்டு கோளாறால் உடலில் நீர் சேரும். இதனால், 3 - 4 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கலாம்; மாத்திரை சாப்பிட ஆரம்பித்தால், இந்த எடை குறைந்து விடும்.
முட்டைக்கோஸ், சோயா, காலிபிளவர் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பை பாதிக்கும் என்பதும் தவறான கருத்து.
பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள வேதிப்பொருள் தைராய்டு சுரப்பை பாதிக்கலாம். சமைத்து சாப்பிடும் போது, முட்டைக்கோசில் உள்ள சல்பர் உடலுக்கு நல்லது.
சர்க்கரை இல்லாத, மாவு சத்து குறைந்த உணவுப் பழக்கத்தால் உடல் எடை குறையும் போது, ஹைப்போ தைராய்டிசம் உட்பட பல கோளாறுகள் தானாகவே கட்டுக்குள் வந்து விடும்.
டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்,
நாளமில்லா சுரப்பிகள் மற்றும் சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவர், சென்னை.
98846 24613, 98412 95644