காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்?
கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. அந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது என்றாலும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மிக மிக மோசமான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது.
சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருந்தது. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துதல், கடல்நீரைக் குடிநீராக்கிப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் தாண்டி இந்த நிலைமை ஏற்பட்டது. இத்தனைக்கும் அதற்கு முந்தைய ஆண்டுகளில்தான் பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டிருந்தது சென்னை.
2010ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாடோ, சென்னையோ இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதென்பது ஒரு வழமையான நிகழ்வாகிவருகிறது. 2011ஆம் ஆண்டின் இறுதியில் தானே புயல், அதற்குப் பிறகு நிலம் புயல், 2015ல் சென்னைப் பெருவெள்ளம், 2016ல் வார்தா புயல், 2017ல் ஒக்கி, 2018ல் கஜா, 2019ல் சென்னையின் கடும் தண்ணீர் வறட்சி, 2020ல் நிவர் புயல் என தொடர்ச்சியாக இயற்கைப் பேரிடர்கள் தமிழ்நாட்டை உலுக்கிவருகின்றன
தமிழ்நாட்டின் பருவ நிலை என்பது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் மழைக்காலமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக்காலமாக அமைந்திருக்கின்றன.
தமிழ்நாடு பெரும்பாலும் தனது தண்ணீர்த் தேவைக்கு இந்த பருவ மழைக் காலத்தையே நம்பியிருக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும் வருடங்களில் தண்ணீர் சார்ந்து மிகப் பெரிய சிக்கல்களை தமிழ்நாடு சந்திப்பது வழக்கம். அல்லது தீவிர புயல்கள் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும்போது, அவை ஏற்படுத்தும் சேதம், மிகக் கணிசமானதாக இருந்து வருகிறது.
இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் செயல்திட்டம் 2.0 ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு, பருவநிலை சார்ந்து அதீதமான நிகழ்வுகளைச் சந்திப்பது அதிகரித்திருக்கிறது என்பதுதான்.
தமிழ்நாட்டின் மழைப் பொழிவைப் பொறுத்தவரை, 1951 - 2013க்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 987 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. குறைந்த அளவாக 317.4 மில்லி மீட்டரும் அதிக அளவாக 1890.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. இதில் நீலகிரி மாவட்டம் அதிகபட்ச சராசரி மழைப் பொழிவையும் கரூர், தூத்துக்குடி மாவட்டங்கள் குறைந்தபட்ச மழைப் பொழிவையும் பெறுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வடகிழக்கு மாவட்டங்களான கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மேற்கு மாவட்டமான நீலகிரி ஆகியவை அதிக மழையைப் பெறுகின்றன.
ஆனால், இவையெல்லாம் மாற ஆரம்பித்துவிட்டன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தமிழ்நாடு ஏற்கனவே எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது என்கிறது தமிழ்நாடு அரசின் செயல்திட்ட அறிக்கை. வெள்ளம், இடியுடன் கூடிய திடீர் மழை, வெப்ப அலை, வறட்சி, மின்னல், காட்டுத் தீ ஆகியவை ஏற்கனவே மக்களைப் பாதிக்க ஆரம்பித்துவிட்டதாக இந்த அறிக்கை சொல்கிறது.
இந்தக் காலநிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் வெப்பநிலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 1951-2013வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த வெப்பநிலையோடு ஒப்பிட்டால், இந்த நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலையானது 1.7 டிகிரி சென்டிகிரேட் முதல் 3.4 டிகிரி சென்டிகிரேட்வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், அதாவது 2025வாக்கில் வெப்பநிலையானது 1.0 டிகிரி முதல் 1.2 டிகிரிவரை அதிகரிக்கக்கூடும்.
இந்தக் காலநிலை மாற்றத்தால் ஒட்டுமொத்த மழையளவானது இந்த நூற்றாண்டின் மத்தியில் 4.4 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் 20.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மழையின் அளவு அதிகரிப்பதற்காக தமிழ்நாடு சந்தோஷப்பட முடியாது.
"ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மழை அளவு அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால், மழை பெய்யும் நாட்கள் மிகவும் குறையும். உதாரணமாக தற்போது 60 நாட்களில் பெய்யும் மழை வெறும் இருபது நாட்களில் பெய்யும். அப்படியானால், ஒவ்வொரு மழையிலும் வெள்ளம் ஏற்படும். வெள்ளம் வடிந்ததும் நாட்கள் வெப்பமானதாக இருக்கும். ஒரே நேரத்தில் மழை பெய்வதால், அதனை சேமித்து வைப்பது இயலாத காரியமாக இருக்கும். இதனால் வறட்சி ஏற்படும்" என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரான எஸ். ஜனகராஜன்.
இதுதவிர, காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் வேறுவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என்கிறார் அவர். இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்டிருக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட 1070 கி.மீ. நீள கடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் துருவப் பிரதேசங்களில் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்கும்போது, அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கும் என்கிறார் ஜனகராஜன்.
"தமிழ்நாடு மட்டுமல்ல, குஜராத், கொல்கத்தா, வங்கதேசம் போன்ற கடலோரப் பகுதிகளும் மூழ்க ஆரம்பிக்கும். இப்போதே தமிழத்தின் கடலோரப் பகுதிகளில் ஓதம் அதிகமுள்ள நாட்களில் கடல் நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்ளே வருகிறது. இந்த தூரம் போகப்போக அதிகரிக்கும். வடசென்னையில் இப்போத பல இடங்களில் கடலரிப்பைப் பார்க்கிறோம். புவியின் மேல்மட்டத்தில் மட்டுமல்லாமல், நிலத்தடிக்குக் கீழேயும் கடல்நீர் உட்புகும்" என்கிறார் ஜனகராஜன்.
சில நாட்களுக்கு முன்பாக Council for Energy, Environment and Water என்ற அமைப்பு "Mapping India's Climate Vulnerability' எனும் தலைப்பில் முதல் முறையாக மாவட்ட அளவிலான காலநிலை பாதிப்பு குறித்த மதிப்பீட்டாய்வை மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலின்படி இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 12வது இடத்தைப் பிடித்துள்ளது. அசாம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 27 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்கலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பேரிடரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தக் காலநிலை மாற்றத்தால் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்கள் வறட்சியை எதிர்கொள்ளும். வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதீதமான வெள்ளத்தை எதிர்கொள்ளும். கிழக்கு மற்றும் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை அதீதமான புயல்கள், தீவிர வெள்ளம், வறட்சி ஆகிய மூன்றையுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியாவின் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் நகரங்களில் சென்னை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. புயலின் பாதிப்பை அதிகம் எதிர்கொள்ளும் நகரங்களில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவில் வெள்ளம், பஞ்சம், புயல் ஆகிய தண்ணீரால் ஏற்படக்கூடிய பேரிடர்களை அதிகம் எதிர்கொள்ளக்கூடிய நகரங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த நகரம் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூர் 83வது இடத்திலும் நாகப்பட்டினம் 91வது இடத்திலும் தூத்துக்குடி 97வது இடத்திலும் கடலூர் 101வது இடத்திலும் விருதுநகர் 134வது இடத்திலும் விழுப்புரம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள் முறையே 153, 154, 156 ஆகிய இடங்களிலும் உள்ளன.
இந்த நிலையில், இம்மாதிரியான பேரிடர்களை எதிர்கொள்வது, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைத் திட்டமிடுவது போன்றவற்றை அரசுகள், திட்டமிட்டதைவிட முன்கூட்டியே செய்ய வேண்டிய நெருங்கிக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் தாக்கும்போது, எந்தத் தனிநபரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை மனதில் கொண்டு இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.