பள்ளி நேரத்திற்கு பிறகு குழந்தைகளை உற்சாகமாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்!
கோவிட் தொற்று பரவல் காரணமாக சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்த குழந்தைகள் தற்போது படிப்படியாக பள்ளிகளுக்கு செல்லும் நேரடி கல்வி முறைக்கு திரும்பி கொண்டு இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவு பல மாதங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்த குழந்தைகளுக்கு, பல மாதங்கள் கழித்து பள்ளி செல்வது ஒரு வித்தியாச அனுபவமாக இருக்கும். வீட்டிலிருந்த சமயங்களில் எப்போதும் பெற்றோரிடமே இருந்து வந்ததால் அவர்களை விட்டு சட்டென்று பிரிந்து பள்ளிக்கு செல்வதை அவர்கள் அழுகை அல்லது விரக்தியாக இருப்பது உள்ளிட்டவற்றின் மூலம் வெளிப்படுத்தக் கூடும்.
இந்த சூழலில் 5 முதல் 6 மணி நேரங்கள் பள்ளியில் நேரத்தை செலவழித்து விட்டு வீடு திரும்பும் அவர்களுக்கு சரியான ஓய்வும், புத்துணர்ச்சியும் அவசியம். எனவே தற்போது பள்ளிகளுக்கு சென்று திரும்பும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் முன்பை விட அதிகமாக பேசுவது, நெருக்கம் காட்டுவது, அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது முக்கியமான ஒன்று. பள்ளி நேரத்திற்கு பின் குழந்தைகளுடன் சிறிது நேரம் உற்சாகமாக செலவழிக்க சில எளிய வழிகள் உள்ளன.
பொதுவாக மனநிலை சோர்வாக இருக்கும் பெரியவர்கள் கூட தங்கள் மனநிலையை மாற்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவதை பார்ப்போம். பள்ளியில் இருந்து வந்து சிறிது நேர ஓய்வுக்கு பிறகு உங்கள் குழந்தைகளை அடிப்படை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது, அவர்களிடையே நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும். தவிர இந்த பழக்கம் சில அடிப்படை வாழ்க்கை திறன்களை கற்று கொள்ள அவர்களுக்கு உதவும். பெற்றோருடன் இணைந்து குழந்தைகள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது வேடிக்கையான நேரமாகவும் அமையும்.
பெற்றோர்கள் பல வேலைகளில் இருந்தாலும் குழந்தைகளும் முக்கியம் என்பதை உணர்ந்து, பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுடன் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்று இயற்கை சூழலில் குழந்தைகளுடன் விளையாடலாம் அல்லது சைக்கிள் ஓட்ட கற்றுத் தரலாம். தொற்று ஆபத்து இன்னும் நீடிப்பதால் கூட்டமில்லாத இடங்களில் குழந்தைகளுடன் விளையாடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்தாலும் அவர்களது வாழ்வில் என்ன நடைகிறது என்பதை பற்றி அவர்கள் வாயாலேயே பேசி கேட்க நேரம் ஒதுக்குவது இல்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் கனவு, அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் பற்றி சரியான நேரத்தில் கண்டறிய குழந்தைகளுடன் பேசுவது அவசியமான ஒன்று. எனவே பள்ளி விட்டு வந்த பிறகு இன்று என்ன நடந்தது என்பதில் துவங்கி பல விஷயங்களை அவர்களிடம் பெற்றோர்கள் பேச வேண்டும்.