என் இருப்பிடத்தை எனக்குக் கொடுங்கள் நான் உங்களை பாதுகாப்பேன்!
நாம் யாரையும் குறை கூறுகின்ற நிலையில் இல்லை. ஏனென்றால், எல்லோரும் தவறு செய்து இருக்கிறோம். தண்ணீர் விடயத்தில், தண்ணீர் இருக்கின்றபோது யாரும் கண்டுகொள்வதில்லை. இல்லாதபோது, அதை தேடி அலைகின்ற மனநிலை நம் அனைவரிடமும் உள்ளது.
தா.பிலால் ஹுசைன்,வழக்கறிஞர்
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு திரும்பினாலும் தண்ணீர், யாருக்கும் எந்தவித பயனும் இல்லை. மாறாக கெடுதல்தான் என்கிறார்கள் சிலர். வைரமுத்துவின் வரிகள்தான் ஞாபகம் வருகிறது. ‘தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்… தண்ணீர் கரையில் முடிக்கிறோம்’ மாநகரம் மாயமானது, தலைநகரம் தள்ளாடுகிறது, சென்னை மக்களின் வாழ்க்கையோ வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றது. குறிப்பாக மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்னை மாநகராட்சி தண்ணீரால் தள்ளாடுகிறது. இதற்கு என்னதான் வழி கோடை காலத்திலோ குடிநீர் வாகனமானது சென்னை தெருக்களை அலங்கரிக்கின்றது. மழைக்காலத்திலோ வாகனம் ஏதுமின்றி தண்ணீர் தெருக்களை அலங்கரிக்கின்றது.
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தை சென்னை வாசிகள் இன்று மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அப்படி மறந்துவிட்டதால் இருந்தால் ஏற்பட்ட விபத்து குறித்து அறிவியல் மற்றும் வானிலை அறிஞர்கள் கூறியதை இங்கே கூறுகிறேன். 2015ல் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு எல் நினோ (EL-NINO)வும் ஒரு காரணம் என்ற அறிவியல் அறிஞர்களால் பெரிதும் பேசப்பட்டது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் (Pacific Ocean) வெப்ப நிலையில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வு ஆகும்.. எல் நினோ பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, எல் நினோ இல்லாத ஆண்டின் காற்றின் ஓட்டம் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் (Northern Hemisphere) இருந்து வழகிழக்கு திசையில் பூமத்திய ரேகையை (Equator) நோக்கி காற்றானது சுற்றிக்கொண்டே இருக்கும். அதே போல, தெற்கு அரைக் கோளத்தில் (Southern Hemisphere) இருந்து வடகிழக்கு திசையில் பூமத்திய ரேகையை (Equator) நோக்கி காற்றானது சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த காற்றின் பெயர்தான் தடக்காற்று (Trade Winds) என்று சொல்வார்கள்.
பசிபிக் பெருங்கடலை எடுத்துக்கொண்டால் அதன் மேற்கு பக்கத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் உள்ளன. அதே போல, கிழக்கு பக்கத்தில் தென் பசிபிக் பெருங்கடலை பொருத்த வரையில் தடக்காற்றானது (Trade Winds) கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். அதாவது அமெரிக்காவ்ல் இருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும். இப்படி தடக்காற்றானது (Trade Winds) நகர்ந்து கொண்டிருக்கும்போது அமெரிக்காவின் கடல் ஓரத்தில் இருக்கின்ற சூடான நீரானது ஆஸ்திரேலியா பக்கம் சேர்த்து இழுத்துக்கொண்டு நகரும். இதனால், சூடான கடல் நீரானது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா கடலோர பகுதிகளில் சென்று குவியும். இதே போல, அதிக வெப்பநிலைக்கொண்ட கடல் நீரானது ஆஸ்திரேலியாவை நோக்கி போகப்போக அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் பசிபிக் கடலின் வெப்பநிலையானது மிகவும் கம்மியாக இருக்கும்.
எந்த இடங்களில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதிகமாக இருக்குமோ அந்த இடத்தில்தான் காற்றின் ஈரத்தன்மையும் அதிகமாக இருக்கும். காற்றின் ஈரத்தன்மையானது அதிகமாக இருந்தால் கட்டுக்கடங்காத மழை பொழிவு ஏற்படும். இதனால் தான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா பகுதிகளில் நிறைய மழைப் பொழிவும் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் கம்மியன மழை பொழிவும் ஏற்படக் காரணம். இதுவரை நாம் பார்த்த இயற்கை நகர்வானது எல் நினோ இல்லாத காலங்களில் ஏற்படக் கூடிய நிலை.
ஆனால், எல் நினோ இருக்கின்ற வருடங்களில் தடக்காற்றானது (Trade Winds) பலவீனம் அடைந்துவிடும் அதனுடைய தன்மையை இழந்துவிடும். பலவீனம் அடைந்தால் எல்லா சூடான கடல் நீரும் மேல்நோக்கி நகரக்கூடும். இதன் விளைவு என்ன என்றால், அமெரிக்கா பக்கத்தில் கடல் பரப்பு வெப்பநிலையானது அதிகமாகி மழை பொழிவு அதிகரித்து வெள்ளக்காடாக மாறும் நிலை ஏற்படும். அதே போல, அதன் மறு திசையில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா பகுதிகளில் கடல் பரப்பு வெப்பநிலையானது கம்மியாகி மழைபொழிவும் குறைந்து வறட்சி ஏற்படுகின்ற நிலையைக்கூட இந்த எல் நினோவா-வால் ஏற்படக்கூடும். எல் நினோ கிட்டத்தட்ட 3ல் இருந்து 7 வருடங்களுக்கு ஒரு முறை உருவாகும். ஆனால், எப்போது வரும் என்று தெரியாது; குறிப்பாக கணிக்கவும் முடியாத நிலையாகும்.
எல் நினோ பசிபிக் கடலோர நாடுகளை மட்டும் பாதிக்காமல் உலகத்தில் இருக்கின்ற எல்லா நாடுகளின் கால நிலைகளையும் உருக்குலைத்துவிடும். வானிலை ஆய்வாளர்கள் பலரின் கருத்துப்படி, 2015-ல் ஏற்பட்ட மழை பொழிவிற்கு எல்நினோவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கணித்தார்கள். ஆனால், குறிப்பாக, எல் நினோ பற்றி நிறைய ஆய்வுகள் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
தமிழ்நாட்டில் இரண்டு விதமான பருவமழை (Monsoons) காலங்கள் இருக்கிறது. ஒன்று தென் மேற்கு பருவமழை (South Western Monsoons) இரண்டு வடகிழக்கு பருவமழை (North Eastern Monsoons). இதில் வடகிழக்கு பருவமழைதான் தமிழ்நாட்டிற்கு மழையைக் கொண்டுவருகிறது. எல் நினோ தென்மேற்கு பருவமழையை பலவீனம் அடையச் செய்து மழை பொழிவைக் குறைக்கின்றது. எல்நினோ வடகிழக்கு பருவமழையை பலப்படுத்தி நிறைய மழைப் பொழிவைக் கொண்டுவருகின்றது. இந்த நிகழ்வுகூட தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவிற்கு காரணமாக இருக்கலாம்.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு நிகழ்வை இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடித்துள்ளார்கள். எல் நினோ போல, அதன் பெயர் இருதுருவ இந்தியப் பெருங்கடல் (Indian Ocean Dipole) என்ற மாற்றங்கள் உருவாகின்றது. எல் நினோ அளவுக்கு IOD அதிக தன்மை வாய்ந்தது இல்லை என்றாலும் பருவமழையை அதிக அளவில் பாதிக்கின்றது. IOD-யானது நேர்மறையாக (Positive) இருக்கும்போது சூடான கடல் நீரை இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் குவியும். இதே போல, எதிர்மறையாக (Negative) இருக்கும்போது கிழக்குப்பகுதியில் குவியும். ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் ஏற்படுகின்ற பருவமழைக்கும் எல் நினோ மற்றும் இந்தியப் பெருங்கடல் டைப்போல் இந்த இரண்டுக்கும் பல காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எல் நினோ அல்லது IOD என்று இனும் பல இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டாலும் கொஞ்சநால் மட்டும் அதைப்பற்றி பேசிவிட்டு நாம் நமது வேலையை பார்க்க சென்றுவிடுவோம். நான் முன்பு சொன்னது போல, 2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சென்னை வாசிகள் மறந்துவிட்டார்கள். ஆம் மறந்துதான் விட்டார்கள். ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டது; நினைவில் இல்லை; மழை பொழிகின்ற காலங்களில் மட்டும் பேசிவிட்டு கோடைக் காலங்களீல் மறந்துவிடுகின்றோம். மறந்ததால்தான் 2015-யை விட அதிகமான குடியிருப்புகளை ஏரிகளிலும் குளங்களிலும் கட்டப்பட்டுள்ளது. கிராமங்கள்ல் பூனை கதை ஒன்று சொல்லுவார்கள். அந்த கதை என்னவென்றால், பூனையைப் பிடித்து கண்களைக் கட்டி ஒரு பையில் போட்டு 1,000 கி.மி தொலைவில் கொண்டு சென்று அதன் கண்களை அவிழ்த்துவிட்டால், தலை தெறிக்க ஓடுமாம். ஓடுவது மட்டும் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் பூனை எந்த இடத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டதோ அந்த இடத்திற்கு மிண்டும் வந்துவிடுமாம். அதே போலதா, இந்த தண்ணீரும் போக வழியின்றி தான் இருந்த இடத்திற்கு வந்துவிடுகிறது. வைரமுத்துவின் வரிகள் போல, காதலி அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை கோடையில் அறிவாய்.
சென்னையின் மக்கள்தொகை பெருக்கம் ஒரே இடத்தை நோக்கிய மக்கள் வருகை ஏனென்றால், சென்னையில்தான் எல்லாவிதமான வசதி வாய்ப்புகள்ம் உள்ளது.
நாம் யாரையும் குறை கூறுகின்ற நிலையில் இல்லை. ஏனென்றால், எல்லோரும் தவறு செய்து இருக்கிறோம். தண்ணீர் விடயத்தில், தண்ணீர் இருக்கின்றபோது யாரும் கண்டுகொள்வதில்லை. இல்லாதபோது, அதை தேடி அலைகின்ற மனநிலை நம் அனைவரிடமும் உள்ளது. இதற்கெல்லாம் யார்காரணம். ஒவ்வொரு தனிமனிதனும்தான் காரணமாவார்கள். நீரின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், தனிமனிதர்கள் ஒரு பக்கம் இருந்தலும், அரசாங்கமும் நீர் ஆதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துள்ளது. உதாரணமாக நிறைய அரசு கல்லூரிகள் நீர் நிலைகளில்தான் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டித்தரப்பட்ட வீடுகளும் நீர்நிலைகளில்தான் அரசாங்கம் கட்டிக்கொடுத்துள்ளது. எல் நினோ போன்ற இயற்கை மாற்றங்களை தாக்குப்பிடிப்பதற்கு ஒரே வழி நீர்நிலைகளை சரிவர பாதுகாத்து வைத்திருந்தால் எந்தவிதமான கனமழையும் ஒன்றும் செய்ய முடியாது.
என் இருப்பிடத்தை எனக்குத் தாருங்கள் நான் அனைவரையும் பாதுகாப்பேன் இது வெறும் வாக்கியம் இல்லை. தண்ணீரின் கண்ணீர்!