கல்வி குரு        

News

மார்ச் 15-இல் தமிழக பட்ஜெட்

MAR 08, 2018 No Comments

img

தமிழக சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதி நிலை அறிக்கையை வரும் 15-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து சட்டப் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் புதன்கிழமை வெளியிட்ட வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 15-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பேரவை மண்டபத்தில் கூட்ட அவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் 2018-2019-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் செயலாளர் கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எட்டாவது முறையாக தாக்கல்: துணை முதல்வராகவும், நிதித் துறை பொறுப்பை வகிப்பவருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார். இதற்கு முன்பு, 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒரு முறையும் என ஏழு நிதியாண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு மட்டும் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த நிலையில், மீண்டும் நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
காவிரி விவகாரம்: சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 15-ஆம் தேதியன்றே அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பேரவை மீண்டும் 19-ஆம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களும், அதற்கு நிதியமைச்சரின் பதிலுரையும் இடம் பெறும். கூட்டத் தொடர் மார்ச் 22 வரை நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மேலாண்மை வாரியம் அமைப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு விவகாரம், மாநிலத்தின் கடன் சுமை, வரி வருவாய் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளை சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள்: மாவட்ட ஆட்சியர்கள்-காவல் துறை அதிகாரிகளின் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், சில முக்கிய அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் எனத் தெரிகிறது. மேலும், பேரவை விதி 110-ன் கீழும் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடவுள்ளார்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: