கல்வி குரு        

Articles

காலைநேர உடற்பயிற்சி புரியும் மாயாஜாலங்கள்

JAN 20, 2018 No Comments

img

அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாய் உடற்பயிற்சி செய்யவும், ஒரு நாளை உற்சாகமாகத் துவக்கவும் பலருக்கும் ஆசை. ஆனால் படுக்கையில் இருந்து எழுவதற்கு சோம்பேறித்தனம்தான் தடை போடுகிறது.

சோம்பலை உதறி காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அது உடலிலும் மனதிலும் புரியும் மாயாஜாலங்கள் என்னென்ன தெரியுமா?

மனஅழுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட அதிகாலை உடற்பயிற்சியே அருமையான வழி.

காலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன்கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.

உடற்பயிற்சி என்றாலே கடினமான பயிற்சிதான் பலன் தரும் என்று சிலர் கருதுகிறார்கள். கடினமான ‘ஜிம்’ பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை.

எளிதான 10 நிமிட ‘வார்ம் அப்’ பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. உடற்பயிற்சியானது வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமை அடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.

காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் காலைப் பயிற்சி அவசியம்.

நவீன தொழில்நுட்ப வசதிகளால் இன்று உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலையில், உடற்பயிற்சியின் மூலம் உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பது அவசியம்.

வெளிப்புறங்களில் பயிற்சியில் ஈடுபட சரியான நேரம் அதிகாலை வேளைதான். இரைச்சலும் சுற்றுச் சூழல் மாசுபாடும் குறைந்த அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப் படுத்தும்.

காலையில் தாமதமாக எழுந்து மந்தமாகத் துவக்குவதைவிட, சூரியன் எழுவதற்கு முன் எழுந்து சுறுசுறுப்பாய் செயல்படத் தொடங்குங்கள். அதன் நற் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: