கல்வி குரு        

Articles

குழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும்

JAN 18, 2018 No Comments

img

பழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நல்லதுக்கு கண்டித்தால் கூட விபரீத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? தீர்வு என்ன? என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகள் விடை தெரியா கேள்விகள் அல்ல.

குழந்தைகள் மனவலிமை பெற முதல் வழி குழந்தை வளர்ப்பு. அண்டை வீட்டாரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ட காலங்களில் குழந்தைகளுக்கு பாசம், விட்டு கொடுக்கும் பக்குவம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் முடித்து, சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாடிய காலம் அது. தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான். 

காலத்தின் கட்டாயம் கூட. ஆனால், இந்நாட்களில் போலி முகமூடியிட்டு, அரிய நம் வாழ்வை நாமே தொலைத்து வருகிறோம். அதையே நம் குழந்தைகளுக்கு பெருமையோடு புகட்டுகிறோம். என் பையனுக்கு மொபைலில் இருக்கும் அத்தனை 

அப்ளிகேஷன்களும் அத்துப்படி, அவனே டவுன்லோடு செய்து கேம்களை விளையாடுகிறான் என பல அம்மாக்களும், அப்பாக்களும் பெருமை பேசுகிறார்கள். பழைய கால விளையாட்டுகளில் கிடைத்த மகிழ்ச்சி, உடல் மற்றும் மன திடத்துக்கு பதிலாக, ஏக்கத்தையும், அகங்காரத்தையுமே இன்றைய செல்போன், கணினி விளையாட்டுகள் விதைக்கின்றன. தான் என்ற அகங்காரம், ஆணவத்தையும், இல்லை என்ற ஏக்கம் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தும்போது விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.

நம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடலாக விளங்குகிறோம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்ற மனோபாவத்தை கடந்து நல்லொழுக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களின் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை விட, சற்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும். 

ஒவ்வொரு பள்ளிக்கும் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும். மாதந்தோறும், ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் சந்திப்புகள் நடைபெறுவது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளை அரவணைத்து, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.

WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்

Copyright © 2015. All rights reserved by kalviguru.com. Designed By Tycoon Pacific.

Connect With Us: